![Three marriages that took place during the period of exile ... Husband who threatened his wife with girlfriends](http://image.nakkheeran.in/cdn/farfuture/HliBsgkYvJ9NiJvI40iMfNNFQspLfrLUDR8LdG6guBM/1633418932/sites/default/files/inline-images/tiruppur-collector-office.jpg)
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிங்காரன். இவர் திருப்பூரில் உள்ள ஒரு பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். அதே பின்னலாடை நிறுவனத்தில் திருப்பூர் மாவட்டம், பாண்டியன் நகரைச் சேர்ந்த கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணும் பணிபுரிந்துவந்தார். இங்குப் பணிபுரிந்தபோது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இருவரும் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் முடித்துள்ளனர். திருமணம் முடிந்து இருவரும் திருப்பூரிலேயே வாழ்ந்துள்ளனர். இந்நிலையில், கீதா இரண்டாவது முறையாக கருவுற்றார். இதையடுத்து, பிரசவத்திற்காக கீதாவை தர்மபுரிக்கு அனுப்பியுள்ளார் சிங்காரன்.
குழந்தை பிறந்தபின்பு தர்மபுரியிலிருந்து திருப்பூர் திரும்பிய கீதா, தனது கணவரின் செயலைக் கண்டு அதிர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து தனது கணவரை திருந்துமாறு அறிவுறுத்தியும் அவர் மாறாததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், ‘எனது இரண்டாவது பிரசவத்திற்காக தர்மபுரி அனுப்பிய எனது கணவர், சில ஆண்டுகள் கழித்தும் என்னை திருப்பூருக்கு அழைக்கவில்லை. அந்த நேரத்தில் அவர் ஏற்கனவே பணிபுரிந்த நிறுவனத்தைவிட்டு வேறு நிறுவனத்திற்குச் சென்றுள்ளார். அங்கு தனது வேலையைத் தொடர்ந்துவந்த எனது கணவர், சில நாட்களில் அங்கு பணிபுரியும் ஒரு பெண்ணை திருமணம்செய்துள்ளார். சில நாட்களில் அந்தப் பெண் மரணித்த காரணத்தால், கோவையைச் சேர்ந்த வேறொரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
மேலும், அதோடு நிறுத்திக்கொள்ளாமல் நான்காவதாக மதுரையைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். பிரசவத்திற்கு அனுப்பிய என்னை அவர் மறந்த நிலையில் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுவந்துள்ளார். மேலும் சிங்காரம், அப்பெண்கள் ஒருவரையொருவர் தெரிந்துகொள்ளாதபடி தனித்தனியாக வாடகை வீட்டில் குடியமர்த்தி வாழ்ந்துவந்துள்ளார். அவர் சாதுர்யமாக செயல்பட்டு இவற்றை எல்லாம் மறைத்துவந்த நிலையில், நான் திருப்பூருக்குத் திடீரென வந்ததும் இவை அனைத்தும் அம்பலமானது. அவரை நான் கண்டிக்கும்போதெல்லம் திமிராக பேசியதோடு மட்டுமில்லாமல், மற்ற காதலிகளையும் வைத்து என்னை மிரட்டினார்’ என கீதா மனுவில் குறிப்பிட்டுள்ளார்.