Skip to main content

பள்ளி பாடப்புத்தகங்களின் விலை உயர்வு ஏன்? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

Published on 14/08/2024 | Edited on 14/08/2024
Why the rise in price of school textbooks Explained by Minister Anbil Mahesh

பள்ளி பாடப்புத்தகத்தின் மேல் அட்டை, காகிதம் மற்றும் அச்சுக்கூலி உள்ளிட்டவற்றின் விலை உயர்வின் காரணமாகப் பாடப்புத்தகம் தயாரிப்பதற்கு ஆகும் செலவினை ஈடுகட்டுவதற்காக மட்டுமே பாடநூல்கள் விலை உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு இலாப நோக்கத்திற்காக உயர்த்தப்படவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டிலுள்ள அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லாப் பாடநூல்கள் வழங்கப்பட்டு வருகிறது. தனியார்ப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு நியாயமான விலையில் பாடநூல்கள் வழங்கப்பட்டு வருகிறது. முந்தைய ஆட்சிக்காலத்தில் 2015 -16 ஆம் கல்வியாண்டில் அதிகபட்சமாக 370 சதவிகிதமும், 2018 - 19 ஆம் கல்வியாண்டில் அதிகபட்சமாக 466 சதவிகிதமும் பாடநூல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Why the rise in price of school textbooks Explained by Minister Anbil Mahesh

குறிப்பாக 11ஆம் வகுப்பு புவியியல் பாடப்புத்தகம் 466 சதவிகிதம், 11 ஆம் வகுப்பு வணிகவியல் பாடப்புத்தகம் 325 சதவிகிதம், 11 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகம் 300 சதவிகிதம் எனப் பாடநூல்கள் விலை அதிகபட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக 2013 - 14 ஆம் கல்வியாண்டிலும் பாடநூல்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை காகிதம், மேல் அட்டை மற்றும் அச்சுக்கூலி ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு பாடப்புத்தகத்தின் விலை உயர்த்தப்படுவது என்பது வழக்கமான நடைமுறையாகும்.

ஒவ்வொரு ஆண்டும் பாடப்புத்தகங்கள் தயாரிப்பதற்கான உற்பத்தி பொருட்களான காகிதம் மற்றும் மேல் அட்டைகளின் கொள்முதல் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. 2018 ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது காகிதம் விலை 63 சதவிகிதமும், மேல் அட்டை விலை 33 சதவிகிதமும். மற்றும் அச்சுக்கூலி 21 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. எனவே அந்த விலையேற்றங்களை ஈடுகட்டும் வகையிலேயே பள்ளி பாடநூல்களின் விலை 6 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது தான் உயர்த்தப்பட்டுள்ளது.

Why the rise in price of school textbooks Explained by Minister Anbil Mahesh

இந்த விலை உயர்வு இலாப நோக்கத்திற்காக உயர்த்தப்படவில்லை. பாடப்புத்தகத்தின் மேல் அட்டை, காகிதம் மற்றும் அச்சுக்கூலி உள்ளிட்டவைகளின் விலை உயர்வின் காரணமாக பாடபுத்தகம் தயாரிப்பதற்கு ஆகும் செலவினை ஈடுகட்டுவதற்காக மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டிலுள்ள அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய குடும்பத்தைச் சார்ந்த மாணவ மாணவியர்களுக்கு விலையில்லாப் பாடநூல்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம், மாவட்ட நூலகங்கள் மற்றும் அறிவு சார் மையங்களுக்குத் தேவையான அளவு பள்ளி பாடநூல்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வரசு என்றுமே மாணவர்களின் நலன் நாடும் அரசாகவே செயல்படும்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்