தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.
இது தொடர்பாக 11 பேர் சரணடைந்த நிலையில் 11 பேரும் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடி காவலில் விசாரணைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தது எப்படி என்பது தொடர்பாக 11 பேரையும் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை செய்த பொழுது இன்று காலை 5 மணி அளவில் மாதாவரம் ஏரிக்கரை பின்புறம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது போலீஸ் காவலில் இருந்து திருவேங்கடம் (33 வயது) தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. தப்ப முன்ற திருவேங்கடத்தை போலீசார் என்கவுன்டர் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிகாலையில் நிகழ்ந்த சம்பவம் இந்த கொலை வழக்கில் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரவுடி என்கவுண்டரில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''விக்கிரவாண்டி இடைத்தேர்தலை பொருத்தவரைக்கும் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கவில்லை. அதனால் அதிமுக போட்டியிடவில்லை. தற்பொழுது பணபலம், அதிகார பலத்தில் திமுக வென்றுள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் பொன்முடியின் சொந்த தொகுதியில் அதிமுக அதிக வாக்கு வாங்கி உள்ளது. தமிழக விவசாயிகள், தமிழக மக்களை பற்றி திமுகவிற்கு கவலை இல்லை. கூட்டணி தான் முக்கியம் என திமுக உள்ளது. விவசாயிகளுக்காக முதல்வர் கொடுக்கவில்லை'' என்றார்.
'ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவேங்கடம் என்ற சரணடைந்த நபர் என்கவுன்டர் செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு, 'இப்பொழுது தான் தொலைக்காட்சியில் பார்த்தேன். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சுட்டுக் கொல்லப்பட்ட நபர் திருவேங்கடம் என்று கருதுகிறேன். அவர் சரணடைந்திருக்கிறார் அப்படி சரணடைந்தவரை வேக வேகமாக அதிகாலையில் அழைத்துச் சென்றதாக ஊடகத்தில் பார்த்து தெரிந்து கொண்டேன். இந்த செய்தி வாயிலாக நான் அறிந்து கொண்டது ஏன் அவசர அவசரமாக அழைத்து கொண்டு செல்ல வேண்டும். அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை கைப்பற்றுவதற்காக அழைத்துச் சென்றதாக சொல்கிறார்கள். அப்படி அழைத்துச் செல்பவர்களை கை விலங்கு இட்டு தான் அழைத்துச் செல்ல வேண்டும். ஒரு கொலை குற்றவாளியை அப்படித்தான் கைது செய்யப்பட வேண்டும் என இருப்பதாக வழக்கறிஞர்கள் சொல்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது பாதுகாப்போடு சென்று இருக்க வேண்டும். அவர்கள் எங்கே அந்த ஆயுதத்தை மறைத்து வைத்திருக்கிறார்களோ அந்த ஆயுதத்தை கைப்பற்றுகின்ற பொழுது இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றதாக சொல்கிறார்கள். இதில் ஏதோ சந்தேகம் இருப்பதாக தெரிகிறது. கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகள் இல்லை என்று ஆம்ஸ்ட்ராங்கின் உறவினர்களும், அவர்களுடைய கட்சி நிர்வாகிகளும் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வேளையில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது'' என்றார்.