தமிழகத்தில் இருந்து ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 10- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் தி.மு.க. கூட்டணி நான்கு இடங்களில் வெல்லும் வாய்ப்பு உள்ள நிலையில், அதில் ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தை நிறுத்த அக்கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விசா முறைகேடு விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அவரது தந்தைக்கு வாய்ப்பு கிடைப்பதில் கடினம் என்று அண்மையில் பேசப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில், கட்சியில் இளைஞர்களுக்கு அதிகளவில் வாய்ப்புகள் தர வேண்டும் என்று பேசப்பட்டது. அதன்படி, மாநிலங்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து இளைஞர் ஒருவருக்கு வாய்ப்பு தர வேண்டும் என்றும், கட்சித் தலைமைக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரியும், மாநிலங்களவை உறுப்பினராக முயற்சி செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழலில், ப.சிதம்பரத்துக்கு கூடுதல் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், அந்த ஒரு இடம் யாருக்கு என்பதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மாநிலங்களவைத் தேர்தலுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான அவகாசம் வரும் மே 31- ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.