உதவித்தொகை வழங்காததை கண்டித்து தாசில்தார் அலுவலகத்தை முதியோர் முற்றுகை
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 8 மாதமாக முதியோர், உடல் ஊனமுற்றோர், மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு சரிவர உதவித்தொகை வழங்கப்படவில்லை. இதனால் முதியோர், மாற்றுத்திறனாளிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள மாநகராட்சி அலுவலகங்களில் தினந்தோறும் பலமணி நேரம் காத்துகிடந்து பணம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து தண்டையார்பேட்டை தாசில்தார் அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருவதாக முதியோர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், தண்டையார்பேட்டை சேனியம்மன் கோயில் தெருவில் உள்ள தாசில்தார் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட முதியோர், மாற்று திறனாளிகள் நேற்று காலை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். தகவலறிந்து வந்த தண்டையார்பேட்டை போலீசார், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.