தமிழக சட்டப்பேரவையில் இன்று (09/05/2022) பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக ஒளிபரப்ப வேண்டும். சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு முறையாக விசாரிக்கப்பட்டது. யார் முதலமைச்சராக இருந்தாலும் காவல்துறை தரும் அறிக்கையையே படித்து வருகிறோம். விக்னேஷ், தங்கமணி மரண வழக்குகளை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று கோரினார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "சட்டமன்றத்தின் கேள்வி நேரம் முழுமையாக ஒளிபரப்பப்படுகிறது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளைக் காப்பாற்றியது யார்? விசாரணை கைதிகள் தங்கமணி, விக்னேஷ் மரண வழக்குகளை அரசு எதையும் மறைக்கவில்லை. இந்த அரசு அப்படி இருக்காது, யார் தவறு செய்தாலும் கட்டாயம் தண்டனை பெற்று தரப்படும். மீண்டும் சொல்கிறேன், சாத்தான்குளம் சம்பவம் போல் இது விசாரிக்கப்படாது, முறையாக விசாரிக்கப்படும். அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த லாக்-அப் மரணங்களில் எந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்துள்ளீர்கள்?
தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொள்ளாச்சி சம்பவம் போல் அல்லாமல் பெண்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கும் அரசாக தி.மு.க. ஆட்சி உள்ளது. மயிலாப்பூர் முதிய தம்பதி கொலை ஆதாயத்திற்காக என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மயிலாப்பூரில் முதிய தம்பதி கொலை வழக்கில் சிறப்புப் படைகள் அமைத்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகளை ஆறு மணி நேரத்தில் கைது செய்த சென்னை காவல்துறைக்கு எனது பாராட்டுகள்" எனத் தெரிவித்துள்ளார்.