சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரித்த நிலையில், 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிட்டது.
இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிர்வாகி குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், ''பாதிக்கப்பட்ட மாணவியின் எல்லா தகவல்களும் வெளியே விடப்பட்டுள்ளது. முதலில் அவர்களை தண்டிக்க வேண்டும். யார் கொடுத்தது? சட்ட ரீதியாக அது தவறு. நிர்பயா வழக்கில் கூட இவ்வளவு நாள் கழித்து தான் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் வெளியே வந்தது. நிர்பயா வழக்கில் அந்த பெண் குழந்தையின் பெயரை வெளியே சொல்வதில்லை. நிர்பயா வழக்கு என்று தான் சொல்கிறோம். அப்படி இருக்கும் பொழுது யார் இந்த பெண்ணுடைய தகவலை வெளியிட்டது.
ஏன் அதைப் பற்றி யாரும் பேச மாட்டேன் என்கிறார்கள். பாஜக, அதிமுக, திமுக, வேறு ஏதோ கட்சி என எல்லாமே கலந்து நீங்கள் சண்டை போட்டுக் கொண்டு இதை அரசியல் பிரச்சினையாக மாற்றாதீர்கள். பெண்களுக்கு எந்த மாநிலத்தில் ஒரு பிரச்சனை நடக்கும் பொழுதும் கால்பந்து போல அங்கேயும் இங்கேயும் தூக்கி வீசி பெண்களை கேவலப்படுத்த வேண்டாம். கனிமொழி எங்கே? ஒவ்வொரு விஷயத்திற்கும் கனிமொழி முன்வந்து விஷயங்களை பேசுகிறாரே இதில் ஏன் பேசவில்லை? திமுகவிற்கும் மகளிர் அணி இருக்கிறதே. அது எங்கே இருக்கிறது.
பாஜக மகளிர் அணி சார்பில் நாங்கள் இங்கே அமர்ந்து செய்தியாளர்களை சந்திக்கிறோம். நாளை கைது செய்தாலும் நாங்கள் பேரணிக்கு போவோம். சௌமியா அன்புமணி கைது செய்யப்பட்டாலும் பரவாயில்லை என போராடி அரெஸ்ட் ஆனார்கள். கொஞ்ச நாளைக்கு முன்பு இதேபோன்று பேரணியின் பொழுது தமிழிசை சௌந்தரராஜன் இரண்டு முறை கைது செய்யப்பட்டார்கள். நாங்கள் அதற்கு பயப்படவில்லை. ஆனால் உங்கள் (திமுக) சார்பில் எந்த பெண் தெருவுக்கு வந்தார்? உங்கள் சார்பாக யார் குரல் கொடுத்தார்கள்? திமுகவிலிருந்து இதுவரை யாராவது ஒரு பெண் மந்திரியாக இருக்கட்டும், எம்பியாக இருக்கட்டும், ஒரு எம்எல்ஏவாக இருக்கட்டும் யாராவது குரல் கொடுத்தார்களா? ஏன் எல்லோரும் மௌனமாக இருக்கிறீர்கள்?'' என்றார்.