ராமர் கோவில் கட்டுவதற்கு அத்தனை லட்சம் கோடி உங்களுக்கு எங்கிருந்து வந்தது என முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், ''நான் ஒரு கேள்வி கேட்கிறேன். ரொம்ப கொச்சையான கேள்விதான். கோயில் கட்டினால் ஆட்சிக்கு வந்திட முடியுமா? ஒரு கோவிலை கட்டி விட்டால் ஆட்சிக்கு வந்து விட முடியும் என எந்த முட்டாள் நினைப்பான். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் எனக்குத் தெரிந்து எங்கள் கிராமங்களில் கும்பாபிஷேகம் செய்தவர்கள் எல்லாம் அடுத்த பஞ்சாயத்து போர்டு எலக்சனில் தோற்று இருக்கிறார்கள். காரணம் மக்கள் அதற்காக வாக்களிப்பது இல்லை.
அது வேறு இது வேறு. இன்றைக்கு அயோத்தியில் நடைபெற்று இருக்கின்ற ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இந்திய அரசாங்கத்தினுடைய பணமோ, உபி அரசாங்கத்தினுடைய பணத்தையோ நீங்கள் தண்ணியாக செலவிடுகிறீர்களே. அது எப்படி நியாயமாகும். ஒரு மதச்சார்பற்ற நாட்டில் எப்படி அதைச் செய்ய முடியும்? எந்த நியாயம் எந்த சட்டம் அதை அனுமதிக்கிறது. நீங்கள் ரயிலை எல்லாம் இலவசமாக அனுப்புகிறீர்கள். எப்படி அது சாத்தியம். யார் அதற்கு பணம் கட்டியது? இன்றைக்கு அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அத்தனை லட்சம் கோடி உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது. அதற்கு கணக்கு காட்ட முடியுமா? ராமருக்கான புகழைக் கெடுத்து விடாதீர்கள் இதைத்தான் நான் பாஜகவிற்கு, ஆர்எஸ்எஸ்க்கும் சொல்லிக் கொள்வது. அவர் அப்பழுக்கற்றவராக இருந்தார். ஆனால் அவருடைய பெயரை பாழ்படுத்துகிறீர்கள் நீங்கள். அது தவறு என்பதை நாம் பரப்புரையாக கொண்டு செல்ல வேண்டும். அச்சப்படக்கூடாது'' என்றார்.