
சென்னை மெரினா அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இரண்டு வடமாநில இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் மாலை நேரத்தில் நிறைய வாகனங்களில் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வந்திருந்தனர். அப்பொழுது காமராஜர் சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் விவேகானந்தர் இல்லம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் மெரினா சாலையைக் கடந்திருக்கிறார். அப்பொழுது எதிர் திசையில் நேப்பியர் பாலத்திலிருந்து சாந்தோம் நோக்கி இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.
அப்பொழுது இரண்டு வாகனங்களும் நேருக்கு நேராக மோதியது. இதில் மூன்று இளைஞர்களும் தூக்கி வீசப்பட்டனர். பின்னால் வந்த கார் இளைஞர்கள் மீது மோதியது. இதில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்த இருவருமே வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் குறித்த அடையாளங்களிலும் தெரியவில்லை என போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் உடல்களும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.