இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் சாதனை திட்டங்களுக்கு முக்கிய பங்காற்றிய தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்குத் தமிழக அரசு சார்பில், ‘ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்’ என்ற தலைப்பில் பாராட்டு விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கத்தில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி (02.10.2023) நடைபெற்றது. இந்த விழாவிற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி உரையாற்றினார்.
இந்த விழாவில் தமிழக விஞ்ஞானிகளான கே. சிவன், மயில்சாமி அண்ணாதுரை, வி. நாராயணன், ஏ. இராஜராஜன், எம். சங்கரன், ஜெ. ஆசிர் பாக்கியராஜ், மு. வனிதா, நிகார் ஷாஜி மற்றும் ப. வீரமுத்துவேல் ஆகிய 9 பேருக்கும் தமிழக அரசு சார்பில் தலா 25 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கி பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சந்திரயான் 3 திட்டத்தில் முக்கிய பங்காற்றிய இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேலுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய 25 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையை தான் படித்த 4 கல்லூரிகளுக்குப் பிரித்து வழங்கினார். அதன்படி தான் படித்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரி, தனியார் பொறியியல் கல்லூரி, திருச்சி என்ஐடி, சென்னை ஐஐடி என 4 கல்வி நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகையை சமமாக பிரித்து வழங்கினார்.