!["When will PM Modi open his mouth on China border issue?" - Kanimozhi MP question](http://image.nakkheeran.in/cdn/farfuture/A4QCG8KhmSypz9wsbBkZprqp8kHwezfH0bTHZRMLIPU/1712026883/sites/default/files/inline-images/arunachal-pradesh-hills-art_0.jpg)
அருணாச்சலப் பிரதேசத்தை சீனா உரிமை கோருவதற்கு மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஆறுகள், ஊர்கள், மலைகள் என 30 இடங்களுக்கு சீன பெயர்களை, சீன அரசு சூட்டி 4 ஆவது பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த 30 ஆம் தேதி சீன குடிமை விவகாரங்கள் துறை அமைச்சகம் சார்பில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன்படி அருணாச்சலப் பிரதேசத்தின் திபெத்திய தன்னாட்சி பகுதியில் உள்ள 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள், ஒரு மலைப்பாதை மற்றும் ஒரு ஏரி என 30 இடங்களுக்கு சீன எழுத்துகளிலும், திபெத்திய மொழிகளிலும் பெயர் சூட்டப்பட்டுள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் சீன மொழி பெயர்கள் இடம் பெற்றுள்ள சம்பவம் உலக அளவில் அதிர்வலையையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த 2017, 2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீன மொழிப் பெயர்களை சீன அரசு சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
!["When will PM Modi open his mouth on China border issue?" - Kanimozhi MP question](http://image.nakkheeran.in/cdn/farfuture/qlSXXL33ghpw3NOxwnzHaD-Pf12IkAcKNHswmt61tpA/1712027030/sites/default/files/inline-images/kanimozhi-camp-art-black.jpg)
இந்நிலையில் இது குறித்து தூத்துக்குடி மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், “அருணாச்சல பிரதேசத்தின் பெயரை மாற்றும் அளவிற்கு நம் நாட்டிற்குள் சீனாவை ஊடுருவ, ஒன்றிய பா.ஜ.க. அரசு அனுமதித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. தங்களின் ஆதாயத்திற்காக, நாட்டின் பாதுகாப்பை அடைமானம் வைத்துவிட்டதா பா.ஜ.க.?. தமிழ்நாட்டில் வாக்குக்காக அவதூறுகளைப் பரப்பும் பிரதமர் மோடி, சீன எல்லை பிரச்சனை குறித்து எப்போது வாய்திறப்பார்?” எனக் குறிப்பிட்டுள்ளார்.