ஆன்டிபாடீக்கள் குறையும்போது மீண்டும் கரோனா தொற்று உண்டாகும் வாய்ப்பு இருக்கிறது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் கரோனா குறித்து அவர் பேசியதாவது, கரோனா பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பினாலும் அவர்களின் ஆன்டிபாடீக்கள் குறையும்போது மீண்டும் கரோனா தொற்று உண்டாகும் வாய்ப்பு இருக்கிறது என பல ஆய்வுகள் நிரூபிக்கின்றன. இதனால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் மக்கள் இந்த விஷயத்தை அசாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள் என்று எச்சரிக்கிறது.
கரோனா தொற்றின் அறிகுறிகள் குறைந்தாலும் அந்த வைரஸின் தாக்கம் உடலில் இருக்கும் என்கின்றனர். எனவே அதிலிருந்து மீண்டு பழைய உடல்நிலைக்கு வர மாதங்கள் கூட எடுக்கலாம். ஐ.சி.எம்.ஆர் கூற்றுப்படி உடலின் ஆன்டிபாடீக்கள் 3-4 வது வாரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கி 100 நாட்கள் வரை நீடிக்கலாம் என்கிறது. அப்படியிருக்க சில அஜாக்கிரதையால் கரோனா வைரஸ் மீண்டும் தொற்றிக்கொள்ள காரணமாகின்றன.
மாஸ்க் அணிவதால் பல வகைகளில் கரோனா வைரஸ் பரவாமல் இருக்கம் என பல ஆராய்ச்சிகள் நிரூபித்துவிட்டன. ஆனாலும் சிலர் மாஸ்கின் முக்கியத்துவத்தை மறந்துவிடுகின்றனர். எனவே மாஸ்க் இல்லாமல் சுற்றுவதாலும் உடலின் ஆன்டி பாடீக்கள் குறையும் சமயத்தில் மீண்டும் கரோனா தொற்றுக்கு வாய்ப்பு உள்ளது.
அதேபோல முழுமையான சிகிச்சை பெறாதது முக்கிய காரணமாகவும் இருக்கிறது. கரோனா அறிகுறிகள் குணமடைந்து வீடு திரும்பிய பின்னரும் சில மாத்திரைகளை சாப்பிட மருத்துவர் பரிந்துரைத்திருப்பார். அவர் குறிப்பிட்ட நாட்கள் வரை நீங்கள் அந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளாமல் அலட்சியம் காட்டினாலும் வைரஸ் பரவலுக்கான அபாயம் உள்ளது.
மேலும், அறிகுறிகள்தான் இல்லையே நான் குணமாகிவிட்டேன் என எண்ணி பலரும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவார்கள். எப்போதும்போல் வெளியே சுற்றுவது, வேலை செய்வது, உடலை வருத்திக்கொள்வது போன்ற விஷயங்களை செய்வார்கள். இது முற்றிலும் தவறான செயல். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி வேகமாக குறையத்தொடங்கும். எனவே மருத்துவரின் ஆலோசனைபடி சில நாட்கள் அல்லது குறைந்தது 14 நாட்கள் வீட்டிற்குள்ளேயே இருந்து நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவுகளை சாப்பிட்டு நல்ல ஓய்வுக்குப் பின்னரே பாதுகாப்பு அம்சங்களுடன் வெளியே செல்ல வேண்டும்.