தமிழகத்தில் 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இந்த வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெற இருக்கிற நிலையில், 1.5 லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 3,585 ஆண் வேட்பாளர்கள், 411 பெண் வேட்பாளர்கள், இரண்டு மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில், வாக்களிக்க வரும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதிகளுக்காகப் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, மாற்றுத் திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தோர் தங்களது வாக்குகளைச் செலுத்தும் இடத்திற்குச் செல்வதற்கு ஏதுவாக, வாக்குச்சாவடிகளில் சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சக்கர நாற்காலிகளை அந்தந்த மையத்திற்கு வரும் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்நிலையில், நெல்லையில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் சக்கர நாற்காலி இல்லாததால், மாற்றுத் திறனாளி பெண் சுமார் 200 மீட்டர் தூரம் வரை ஊர்ந்து சென்றே வாக்களித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட பணகுடி பேரூராட்சியில் 50க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் திருஇருதய ஆரம்பப் பள்ளியில் 8 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் 234வது வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் வந்திருந்தார்.
அவர், பள்ளியின் உயரமான வாயிலில் இருந்து சுமார் 150 மீட்டர் ஊர்ந்து முதலாவதாக வாக்குச்சாவடி 234க்கு வந்தார். அங்கு ஆண்கள் மட்டுமே வாக்களிக்க முடியும், பெண்களுக்கு தனியாக வாக்குச் சாவடி உள்ளது என அதிகாரிகள் கூறினர். இதனை அடுத்து அந்தப் பெண் மேலும் 100 மீட்டர்கள் படிகளையும் தாண்டி ஊர்ந்து சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.
அந்தப் பெண் சுமார் 200 மீட்டர் கடுமையான வெயிலுக்கு நடுவில் எதனையும் பொருட்படுத்தாமல் தவழ்ந்து சென்றார். இவர் அப்படிச் சென்றது பார்ப்போரைக் கண்கலங்கச் செய்தது. இருப்பினும் இந்தப் பள்ளியில் முதியோர்களையும், மாற்றுத்திறனாளிகளையும் அழைத்துச் செல்வதற்குச் சக்கர நாற்காலி கொடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால், முதியோர்கள் பலரும் நடக்க முடியாமல் நடந்து சென்று தங்களது வாக்குகளைச் செலுத்தினர்.
மேலும், பள்ளியின் நுழைவுவாயில் உயரமாக இருந்ததால், அதில் இறங்க முடியாமல் முதிர்ந்த பெண் ஒருவர் நீண்ட நேரம் கஷ்டப்பட்டார். இதனையடுத்து, அங்கு வந்த வாக்காளர்கள் இதுகுறித்து அதிகாரிகளிடமும் புகார் அளித்தனர்.
"ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சக்கர நாற்காலி முறையாக வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பணகுடி திருஇருதய ஆரம்பப் பள்ளியில் எந்தவிதச் சக்கர நாற்காலியும் வழங்கப்படவில்லை. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வாக்காளர்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், சக்கர நாற்காலி இல்லாததால் மாற்றுத்திறனாளி பெண் ஊர்ந்து சென்று வாக்களித்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவிய சூழலில், இது நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவின் கவனத்திற்கும் சென்றுள்ளது. இதுகுறித்த தகவலறிந்த அவர், உடனே அந்த வாக்குச்சாவடிக்கான சக்கர நாற்காலிகளை ஏற்பாடு செய்துகொடுத்துள்ளார்.