தேமுதிக தொடங்கப்பட்டு முதன் முதலாக 2006ல் தமிழ்நாடு முழுவதும் தனித்து நின்றபோது 8.4. சதவீத வாக்குகளை பெற்றது. விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார். அதன்பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு 10.3 சதவீத வாக்குகளை பெற்றது. அதன்பிறகு 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக 29 தொகுதிகளில் வெற்றி பெற்று 7.9 சதவீத வாக்குகளை பெற்றது. ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் வெற்றிபெற்று முதல் முறையாக எதிர்க்கட்சித் தலைவரானார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் 14 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக 5.1 சதவீதம் வாக்குகளை பெற்றது. 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் இடம்பெற்று 104 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக 2.4 சதவீத வாக்குகளை பெற்றது.
2011 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஒவ்வொரு தேர்தலிலும் சரிவை சந்தித்து வந்திருக்கிறது தேமுதிக.
கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றது. அப்போது 14 தொகுதிகளில் போட்டியிட்டது. ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. இந்த 14 தொகுதிகளிலும் சேர்த்து அவர்கள் மொத்தம் பெற்ற வாக்குகள் 20,78,843. சராசரியாக ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு 1,48,489 வாக்குகள் பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் இடம்பெற்று போட்டியிட்டது தேமுதிக. முதல் அமைச்சர் வேட்பாளராக உளூந்தூர்பேட்டையில் போட்டியிட்ட விஜயகாந்த் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். 104 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. 104 தொகுதியிலும் தேமுதிக பெற்ற மொத்த வாக்குகள் 10,34,384. சராசரியாக ஒரு தொகுதியில் 9,946 வாக்குகளை தேமுதிக பெற்றுள்ளது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 20,78,843 வாக்குகள் பெற்ற தேமுதிக 2016 சட்டமன்றத் தேர்தலில் பாதியாக குறைந்து 10,34,384 வாக்குகள் பெற்றது.
தற்போது மூன்று ஆண்டுகள் கழித்து தேமுதிகவின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை தேர்தல் முடிவுகளில்தான் தெரிய வரும். விஜயகாந்த்தின் உடல்நிலை சார்ந்த விஷயங்கள், கட்சியில் ஏற்பட்டிருக்கக்கூடிய மாற்றங்கள். ஒரே நாளில் திமுக, அதிமுக என இரண்டு பக்கமும் பேரம் பேசிய விவகாரம். கூட்டணி பேச்சுவார்த்தை விஷயத்தில் அதிமுகவின் கை ஓங்கியிருப்பதால் அவர்கள் கொடுப்பதை வாங்கிக்கொள்ளும் இடத்தில் தேமுதிக தற்போது தள்ளப்பட்டுள்ளது. தனித்து போட்டியிடும் முடிவையும் எடுக்க முடியாமல் உள்ளது. ஆகையால் தேமுதிகவின் பலத்தை அறிய எலெக்சன் ரிசல்ட் வரை காத்திருப்போம்.