Skip to main content

செத்து மிதந்த மீன்களால் பரபரப்பு.. அதிகாரிகள் விசாரணை..!

Published on 25/04/2023 | Edited on 25/04/2023

 

There is a stir due to floating fish.... Officials are investigating..!

 

ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் செத்து மிதந்த மீன்களால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

ஈரோடு மாநகராட்சி 4-வது மண்டலத்துக்கு உள்பட்டது கனிராவுத்தர் குளம். ஈரோடு சத்திரோட்டில் சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்தக் குளம் பல்வேறு அமைப்புகளால் தூர்வாரப்பட்டு பராமரிப்பு செய்யப்பட்டு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியின் முக்கிய நிலத்தடி நீராதாரமாக இந்த குளம் உள்ளது. இந்த நிலையில், இன்று காலையில் குளத்தின் கரையைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் பலரும் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்துள்ளனர். அப்போது குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மீன்கள் செத்து மிதந்தது தெரியவந்தது.

 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிலர் கூறுகையில், நேற்று இந்தக் குளத்தில் சிலர் நிறைய மீன்களைப் பிடித்துச் சென்றனர். இன்று காலையில் அதே இடத்தில் தற்போது மீன்கள் செத்து மிதக்கின்றன. இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்றனர். திடீரென குளத்தில் மீன்கள் செத்து மிதந்தது அப்பகுதி மக்களிடையே குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மீன்கள் இறந்ததற்கான காரணம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

 


 

சார்ந்த செய்திகள்