காவல்துறை மேற்கு மண்டல தலைவரான ஐ.ஜி பெரியய்யா இன்று ஈரோடு மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் காவலர்களை நேரில் சந்தித்து பணிகளை ஆய்வு செய்தார். பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்போதைய நிலையில் 28 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் 80 க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் சிகிச்சையில் உள்ளார்கள்.
இங்கு காவல் பணியில் ஈடுபட்ட போலீசாரை நேரில் சந்தித்த ஐஜி பெரியய்யா, "இது மனித குலத்துக்கு எதிராக வைரஸ் நடத்தும் போர். அதில் மனிதகுலம் வெற்றிகொள்ளும் இந்த நடவடிக்கையில் போலீசாராகிய நமது பங்கும் மிக முக்கியமானதாக உள்ளது. ஆகவே காவல் பணியில் உள்ள போலீசார் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அதேபோல் பொதுமக்கள் ஏதாவது தேவைகளுக்காக வரும்போது அவர்களையும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க அறிவுரை கூறுங்கள்.
மேலும் சமீபத்தில் உயர் அதிகாரிகள், பொதுமக்கள் மத்தியில் காவலர்களின் பணி சிறப்பானதாக இருக்க வேண்டும் என்றும், பொதுமக்களிடம் கடுமையான நடவடிக்கை கூடாது, துன்புறுத்தக் கூடாது என கூறியிருக்கிறார்கள். அதை ஏற்று காவலர்கள் நடந்து கொள்ள வேண்டும்" என்றார்.
அடுத்து சித்தோடு, விஜயமங்கலம் என பல பகுதிகளுக்கும் சென்று அங்கு காவல் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரை சந்தித்து, பணியின் நமது உடல் நலத்திலும் அக்கறை கொள்ள வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் வாகன சோதனையின் போது ஒவ்வொருவரும் அருகே சென்று பணியை செய்யக்கூடாது. தனிமனித இடைவெளி மிகவும் அவசியம். அதுபோல் நோய் வராமல் பாதுகாப்பதும் நோய் நம்மை தாக்காமல் பாதுகாப்பதும் நமது கடமை என தெரிவித்தார். இந்த நிகழ்வில் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உட்பட பல காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.