"நமது இலக்கு என்பது 2021- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் தான். அதில் வெற்றி ஒன்றே நமது குறிக்கோள்" என்று மக்கள் நீதி மய்யத்தின் இளைஞர் அணி செயலாளரும், கவிஞருமான சினேகன் பேசினார்.
ஈரோட்டில் மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் மண்டல நகர ஒன்றிய செயலாளர்கள் அறிமுக கூட்டம் இன்று (10/02/2020) நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட சினேகன் பேசுகையில்,
"நமது மக்கள் நீதி மய்யத்தின் முக்கியமான நிர்வாகிகள் பலர் இந்த கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களாகத் தான் உள்ளனர். நான் சென்ற ஒரு ஆண்டுக்கு முன்பு இந்த ஈரோடுக்கு வந்தபோது, இருந்த எழுச்சியை இப்போதும் காண்கிறேன். நமது இலக்கான 2021ல் நம்மவரை தமிழ்நாட்டின் முதல்வராக அமர வைக்க வேண்டும் என்பதுதான். அதை நோக்கித்தான் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அதற்காக நம் உழைப்பை கடுமையாக செலுத்த வேண்டும். இப்போது தமிழ்நாட்டுக்கு சிறந்த ஆளுமை தேவைப்படுகிறது. அந்த ஆளுமையை கமல்ஹாசனால் மட்டுமே கொடுக்க முடியும். நம்மைப் பொறுத்த வரை இங்கு எதிர்க்கட்சி என்று யாருமில்லை. ஆனால் எதிரிக்கட்சிகள் தான் உள்ளனர்." என்றார்.
2021- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசனை முதல்வராக்க அதற்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். ஈரோடு மக்களின் நீண்டகால கோரிக்கைகளை கண்டறிந்து அதை நீக்க வேண்டும். கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் .வாரம் ஒருமுறை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்த வேண்டும். கமல்ஹாசனின் தொலைநோக்கு திட்டம் செயல்பாடு குறித்து மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.