கோவையில் மருத்துவமனை வளாகத்தில் இரும்பு கம்பிகளை திருட முயன்றதாக ஒருவரை மருத்துவமனை ஊழியர்கள் அடித்துக் கொலை செய்த சம்பவத்தில் 15 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கோவையில் உள்ள மிகப் பிரபல மருத்துவமனைகளில் ஒன்று கேஎம்சிஎச் மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் நேற்று முன்தினம் நபர் ஒருவர் அங்கிருந்த இரும்பு கம்பிகளை திருட முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த மருத்துவமனையின் பாதுகாவலர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அந்த நபரை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த நபர் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.
இதுகுறித்து பீளமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்ற நிலையில் அடித்துக் கொல்லப்பட்டது ராஜா என்கிற மணி என்பது தெரியவந்துள்ளது. தன் கணவர் அடித்துக் கொல்லப்பட்டதை அறிந்த மனைவி மருத்துவ வளாகத்தில் கதறி அழுதது பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. சிகிச்சைக்காக சென்ற தனது கணவரை திருட வந்ததாக தவறாக நினைத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் தாக்கி கொன்று விட்டதாக அவருடைய மனைவி மருத்துவமனை வளாகத்திலேயே கதறி அழுதார். இந்நிலையில் தற்போது விசாரணை அடிப்படையில் கேஎம்சிஎச் மருத்துவமனையின் துணைத்தலைவர் நாராயணன் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் நீதிமன்றத்தில் அனைவரையும் ஆஜர்படுத்த பீளமேடு காவல் துறையினர் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் உரிய நீதியை பெறாமல் ராஜாவின் உடலை வாங்க மாட்டோம் என அவரின் மனைவி மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 'கணவன் இறந்ததையே என்னிடம் சொல்லவில்லை. கொடூரமாக தாக்கி கொன்றுள்ளனர். நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம்' என ராஜாவின் மனைவி தெரிவித்தார்.