நாட்டின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளது. டெல்லியில் செங்கோட்டையில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டிருந்தது. அதேபோல தமிழகத்திலும் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழக ஆளுநர் மாளிகை சார்பில் சுதந்திர தினத்தன்று பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்து அளிக்க முடிவு செய்து அதற்காக அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த தேநீர் விருந்தை திமுகவின் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்திருந்தனர். திமுகவும் ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள மாட்டோம் என தன்னுடைய புறக்கணிப்பை தெரிவித்திருந்தது.
அதேநேரம் அதிமுக, ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் தமிழக ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்தில் தமிழக அரசு சார்பில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இன்று நடக்கக்கூடிய தேநீர் விருந்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என தெரிவித்துள்ள தங்கம் தென்னரசு, ஆளுநர் பொறுப்புக்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் அவர் கொடுக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க முடிவு செய்திருக்கிறோம். கருத்தியல் மாறுபாடு உள்ளதால் கட்சி ரீதியாக இந்த விருந்தில் திமுக பங்கேற்கவில்லை' என தெரிவித்துள்ளார்.