இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பேசுகையில், ''தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பெப்சி தொழிலாளர்களுக்கும், உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்பு கொடுத்து அவர்கள் பொருளீட்டுகின்ற வகையில் தமிழ்நாட்டினுடைய முன்னணி கதாநாயகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியாக இருந்தாலும், விஜய்யாக இருந்தாலும், அஜித்தாக இருந்தாலும் எந்த முன்னணி நடிகர்களாக இருந்தாலும் தமிழ்நாட்டு தொழிலாளர்களை வாழ வைக்கின்ற வகையில் தமிழ்நாட்டில் படப்பிடிப்பு நடத்தி அவர்களுடைய குடும்பங்களை வாழ வைப்பதற்கு முன்வர வேண்டும்.
சட்டமன்றத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று நான் வலியுறுத்திப் பேசி இருக்கிறேன். அது போன்று வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. நீங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அந்தந்த சாதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு சமூக நீதியை வழங்குவதற்கு காலதாமதம் ஆகும் என்று சொன்னால், உடனடியாக 10.5% இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியதைப் போல் இனி அதைத் தள்ளுபடி செய்யாத வண்ணம் உரிய ஆவணங்களோடு சட்டம் இயற்றுங்கள் என்ற கோரிக்கையும் சட்டமன்றத்தில் வைத்துள்ளேன். இந்த இரண்டு கோரிக்கைகளும் கோரிக்கையாகவே இருக்கிறது. அதனால்தான் முதலமைச்சருக்கு ஒரு அழுத்தத்தைத் தருகின்ற வகையில் சாதி, மதம் கடந்து சமூக நீதி அனைத்து மக்களுக்கும் வேண்டும் என்கின்ற சமூக நீதிக் கோட்பாட்டின் தத்துவத்தின் அடிப்படையில் கோட்டையை நோக்கி மாபெரும் கோரிக்கை பேரணி எதிர்வரும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கின்ற நேரத்தில் நடத்த இருக்கிறோம்.
ஆளுநர் எந்த ஒரு சட்டம் இயற்றினாலும் அனுமதி தர மறுக்கின்றார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு மாநில அரசால் மட்டும் முடியாது இது மத்திய அரசு சம்பந்தப்பட்ட ஒன்று. ஆகவே ஒன்றிய அரசிடமும் அனுமதி பெற வேண்டும். ஒன்றிய அரசும் மாநில அரசும் சேர்ந்து நடத்தப்பட வேண்டிய ஒன்று. மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றால் மாநில அரசே நடத்தும் என பீகார் முதல்வர் தெரிவித்துள்ளார். முன்பு பாண்டிச்சேரியில் முதல்வராக இருந்தவர்கள் இது போன்ற அறிவிப்பை வெளியிடப்பட்டிருக்கிறார்கள். அதுபோன்ற ஒரு அறிவிப்பினை மாநில முதல்வர் வெளியிட வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதற்காகத்தான் இந்தப் பேரணி'' என்றார்.