மனித சமூகத்தில் மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகளை உடன் பிறப்புகளாக கருதாமல் கேலிப்பொருளாகவும், பாலியல் பொருளாகவும் பார்த்து வரும் இந்த நாட்டில், அவர்களில் சாதனை படைத்து மற்றவர்களையும், சாதனையாளர்களாக மாற்றி வரும் திருநங்கைகளை அழைத்து பாராட்டு விழா நடத்தி பதக்கங்களையும் வழங்கியிருக்கிறது கலைத்தாய் அறக்கட்டளை.
நாகை மாவட்டம் மங்கைநல்லூரை தலைமையிடமாகக்கொண்டு இயங்கி வரும் 'கலைத்தாய் அறக்கட்டளை' பல்வேறு வகையில் நலிந்துவரும் கலைகளையும், கலைஞர்களையும் மீட்டு வருவதோடு ஊக்கப்படுத்தியும், விளிம்பு நிலையில் உள்ள கலைஞர்களை மீட்டெடுக்கும் பணியை மிகச்சிறப்பாக செய்து வருகிறது. திருநங்கைகளில் சாதித்து தனித்துவமாக விளங்கி வருபவர்களை அழைத்து அவர்களை பாராட்டி கௌரவித்து பதக்கங்களையும் வழங்கி சிறப்பித்திருக்கிறார்.
மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் உள்ள ஒரு அறங்கத்தில் நடந்த இந்த விழாவில் மயிலாடுதுறை, சீர்காழி, ஆகிய தாலுக்கா தாசில்தார்களும், பல்வேறு நகர, அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட சான்றோர்களும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் ஒவ்வொரு தளத்திலும் சாதித்து வரும் 20- க்கும் மேற்பட்ட சாதனை திருநங்கைகள் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்றனர்.
பாராட்டு விழாவை நடத்திய கலைத்தாய் அறக்கட்டளையின் நிறுவனர் கிங் பைசல் கூறுகையில்," நான் பிறந்தது இஸ்லாமிய சமூகம் என்றாலும், பாரம்பரியமிக்க கலைகளின் மீது எனக்கு சிறு வயதிலிருந்தே ஆர்வம். அதனுடைய வெளிப்பாடு பள்ளிப்பருவத்திலேயே ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நாடகங்களின் மேடையேறி நடிப்பதும். சிவன் வேடமணிந்து நடிப்பதுமாக இருந்தது. இன்று படிப்படியாக வளர்ந்து பல்வேறு விருதுகளையும் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக வளர்ந்திருக்கிறேன். திருவிளையாடல் திரைப்படத்தில் சிவாஜிகணேசன் சிவன் வேடம் அனிந்தார். அதற்கு பிறகு நான் தான் என பலரும் கூறுவார்கள். அந்த புகழோடு இன்றும் கலைத்தொழிலில் ஈடுபட்டு வருகிறேன்.
நான் சிவனாக நடித்தாலும் பெண் வேடம் இடுபவர்கள் எல்லோருமே திருநங்கைகளாக இருப்பார்கள். எனது குழுவில் பெண் வேடமிடும் அத்தனை பேருமே திருநங்கைகள் தான். ஒருவகையில் அவர்களுக்கு வாழ்வு அளிக்கிறோம் என்பதைத் தாண்டி, அவர்களையும் மனிதர்களாக மதிக்க வேண்டும் என்கிற சமூக சிந்தனை தான். அதனுடைய உந்துதல்தான் தமிழகம் முழுவதும் பல்வேறு தளங்களில் சாதனை படைத்து சாதித்துவரும் திருநங்கைகளை அழைத்து பாராட்டு விழா நடத்தி மரியாதை செலுத்த வேண்டும் என நினைத்தேன். அதன்படி அழைத்து அனைவரையும் கவுரவித்திருக்கிறேன். தமிழகத்திலேயே முதல்முறையாக திருநங்கைகளை அழைத்து பாராட்டு விழா நடத்தியது இதுவே முதல்முறை." என்கிறார் உற்சாகத்துடன்.
பாராட்டுகளைப் பெற்ற திருநங்கைகளோ," எங்களுக்கு என்று உறவுகள் எதுவுமில்லை, எங்கோ பிறந்தோம், எங்கோ வளர்ந்தோம், எங்கிருந்தோ வந்தவர்கள் எங்களோடு உறவாக தாயாக பிள்ளையாக ஒன்றாக இருக்கிறோம், நாங்களும் மனிதர்கள்தான் என்பதை எங்களால் முடிந்தவரை மனித சமூகத்திற்கு உணர்த்தி வருகிறோம். எங்களை பெற்றவர்களை எங்களை மனிதர்களாக பார்க்கவில்லை என்றால், இந்த சமூகம் எப்படி பார்க்கும். எங்களை அழைத்து பாராட்டு விழா நடத்திய கலைத்தாய் அறக்கட்டளைக்கு நாங்கள் என்று கடமைப்பட்டுள்ளோம்," என்றனர் பலரும்.