தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் அக்டோபர் 9 ஆம் தேதி கூடும் எனத் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், இன்று (09.10.2023) காலை 10 மணிக்கு கூடியது. சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பைப் பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார். காவிரி விவகாரத்தில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவைக் கர்நாடக அரசு நிறைவேற்ற உத்தரவிடக் கோரி, தமிழக அரசு சார்பில் தனித் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து கேள்வி, பதில் விவாதம் நடைபெற்றது. 'மதுரையில் சுத்தமான குடிநீர் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?' என்ற கேள்வியை முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜு வைத்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, 'வைகை அணை அருகே தொட்டிகள் கட்டப்பட்டு, குடிநீர் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்க இருக்கிறது' என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து செல்லூர் ராஜுவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், 'வைகை அணையை தெர்மாகோல் போட்டு மூடி வைத்துள்ளோம்' என பதில் அளித்ததால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.