2025 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மற்றும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் என அனைவரும் சட்டப்பேரவை வளாகத்தில் கூடினர். சட்டப்பேரவைக்குள் வந்த அதிமுக எம்எல்ஏக்கள் 'யார் அந்த சார்'? என்ற பேஜ் அணிந்து கொண்டு வருகை புரிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரம் குறித்து அதிமுக எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பிய நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அமளியில் ஈடுபட்டதால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். அதேபோல் வந்திருந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றாமல் சிறிது நேரத்திலேயே சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில் முதல்வரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், ''அண்ணா பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் உயர் நீதிமன்றம் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்திருக்கிறது. 'யார் அந்த சார்?' என்று கேள்வி எழுப்பவர்கள் நேரடியாக சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் இந்த கேள்வி எழுப்பலாம். அல்லது நீதிமன்றத்தில் கூறலாம்.
தமிழ்நாடு அரசின் மீது தமிழ்நாடு காவல்துறையின் மீது திரும்பத் திரும்ப குற்றம் சுமத்துவது என்பது அந்த பெண்ணுக்கான நீதியை கோரும் குரலாக இல்லாமல் தங்களின் ஆதாயத்திற்கான அரசியல்தான் என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள். விசிக ஆளுங்கட்சி கூட்டணியில் இருக்கும் சூழலில் ஒரு எதிர்க்கட்சியை போல் செயல்பட முடியாது. தோழமைக் கட்சியாக தான் செயல்பட முடியும். அப்படித்தான் செயல்பட வேண்டும். அதுதான் அரசியல் நாகரிகமும் கூட.
அந்த வகையில் தோழமைக் கட்சியாக அதே நேரத்தில் மக்கள் பிரச்சினைகளை வலுவாகப் பேசுகின்ற கட்சியாக, பாதிக்கப்படுகின்ற மக்களுக்கான நீதியைக் கோருகின்ற கட்சியாக இயங்கி வருகிறோம். எங்களுக்கு அதில் எந்த சிக்கலும் இல்லை. ஆளுங்கட்சிக்கு சுட்டிக்காட்ட வேண்டிய பிரச்சனைகளை சுட்டிக்காட்டி இருக்கிறோம். கண்டிக்க வேண்டிய பிரச்சனைகளை அவ்வப்போது பொதுவெளியில் கூட கண்டித்திருக்கிறோம். அது தோழமை கட்சியாக எங்களுக்கு இந்த கூட்டணியில் இருக்கும் சுதந்திரம் என்பதைப் பல இடங்களில் நாங்கள் பதிவு செய்திருக்கிறோம். இப்போதும் பதிவு செய்கிறோம் எங்கள் சுதந்திரத்தில் கூட்டணி என்ற பெயரில் ஆளுங்கட்சி ஒருபோதும் தலையிட்டதில்லை'' என்றார்.