கலைஞர் மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தை திறந்து வைத்து சென்னை சைதாபேட்டையில் தமிழக முதல்வர் உரையாற்றினார்.
அவரது உரையில், ''அண்ணா காலத்தில் கலைஞர் காலத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருந்தாலும் அதை தொடர்ந்து இன்றைக்கு பொறுப்பேற்று இருக்கக்கூடிய திமுக அரசு, அண்ணா வழியில் கலைஞர் வழியில் தந்தை பெரியார் எந்த கனவை கண்டு, எதற்காக வாழ்நாள் முழுவதும் போராடினாரோ அந்த எண்ணங்கள் எல்லாம் நிறைவேற்றப்படும் வகையில் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
குறிப்பாக சொல்ல வேண்டும் எனச் சொன்னால் அரசுப் பணிகளில் மகளிர்க்கு இட ஒதுக்கீடு; மகளிர் சுய உதவிக் குழுக்கள்; சொத்தில் பெண்களுக்கு சம உரிமை இப்படி பல்வேறு திட்டங்களை நிறைய சொல்லலாம். பெண்களின் பொருளாதார தன்னிறைவுக்காகவும் பல்வேறு திட்டங்களை திமுக ஆட்சி தீட்டி வருகிறது. பெண்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என்பதை தாண்டி அதனுடைய அடுத்த கட்டமாக பெண்களுடைய உயர்கல்வியை உறுதி செய்யக்கூடிய திட்டங்களை தீட்டி வருகிறோம்.
அந்த வகையில் தான் என்னுடைய கொளத்தூர் தொகுதியில் அரியலூர் பகுதியைச் சேர்ந்த மாணவி அனிதா தன்னுடைய மருத்துவ கனவை நிறைவேற்ற முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டு நீட் தேர்வின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட அந்த தங்கை பெயரில் 'அனிதா கோச்சிங் அகாடமி' என்ற ஒன்றை ஆரம்பித்து என்னைத் தேர்ந்தெடுத்த கொளத்தூர் தொகுதி மக்களுக்காக திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். கணினி சார்ந்த படிப்புகள், இலவசம் மடிக்கணினி, தையல் பயிற்சி உள்ளிட்ட பல பயிற்சிகளை பெண்கள் முடித்து இன்று நல்ல நிலையில் இருந்து கொண்டிருக்கிறார்கள்'' என்றார்.