சென்னை செனாய் நகரில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் சமூக வலைத்தள தன்னார்வலர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “பக்குவப்பட்ட காலத்தில் பிறந்தவன் ஸ்டாலின் என என்னை கலைஞர் கூறினார். பேசி பேசி எழுதி எழுதி வளர்ந்த இயக்கம் தான் திமுக. தமிழினத்தை தலை நிமிர்த்துவதற்காக பிறந்த இயக்கம்தான் திராவிட இயக்கம். இப்போது ‘சீவிடுவேன் சீவிடுவேன்’ என சொல்கிறார்களே, அப்படி யாருடைய தலையையும் எடுக்க பிறந்த இயக்கமல்ல.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் வகுத்துத் தந்த பாதையில் தான் திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சமூக ஊடகங்களில் திமுகவின் கொள்கை எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. நெகட்டிவ் பிரசாரம் மூலம் எதிரியை வீழ்த்துவதைவிட பாசிட்டிவ் பிரசாரம் மூலம் நம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவதூறு பரப்பும் நோக்கத்திலேயே எதிரணியினர் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். சமூக வலைத்தளங்கள் ஒரே நாளில் புகழின் உச்சிக்கும் கொண்டு செல்லும். ஒரே நாளில் கீழேயும் இறக்கிவிடும்.
என் மனைவி துர்கா ஸ்டாலின் எந்த கோயிலுக்கு செல்கிறார் என்பதை பார்ப்பதுதான் பாஜகவினரின் ஒரே வேலையாக உள்ளது. அங்கே சென்று அவரை ஃபோட்டோ எடுத்துவிட்டு இதோ பார்த்தீர்களா ஸ்டாலின் மனைவி கோயிலுக்கு செல்கிறார் என பரப்புவார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா கோயிலுக்கும்தான் என் மனைவி செல்கிறார். அது அவருடைய விருப்பம். அதை நான் தடுக்க விரும்பவில்லை. தடுக்கவும் தேவையில்லை. நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்குதான் எதிரியே தவிர, ஆன்மிகத்திற்கு அல்ல. பாஜகவின் சாதி தன்மை தமிழ்நாட்டிற்கு மட்டும் எதிரானது அல்ல. இந்தியாவிற்கே எதிரானது. ஒட்டுமொத்த மனித குலத்திற்கே எதிரானது. சாதி, மதத்தின் பெயரால் பிளவுபடுத்தி நாட்டை நாசம் செய்ய நினைக்கக் கூடிய ஒரு கூட்டத்திற்கு எதிராக நாம் மோதிக்கொண்டிருக்கிறோம்” என பேசினார்.