மனிதநேய ஜனநாயக கட்சியின் ஏழாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “சேவை அரசியலை முன்னிறுத்தி பிப்ரவரி. 28.2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மனிதநேய ஜனநாயக கட்சி, ஏழாம் ஆண்டில் பயணத்தை தொடங்குகிறது. அதிகாரமற்ற மக்களை அரசியல்படுத்துவதும், புறக்கணிக்கப்படும் மக்களுக்கு சுயமரியாதை சிந்தனையை ஊட்டுவதும், வெறுப்பு அரசியலுக்கு மாற்றாக சமூக நீதி அரசியலை கட்டியமைப்பதும்தான் இதன் லட்சியங்களாக இருக்கின்றன.
நீதிக்காகவும்; உண்மைக்காகவும், இழப்புகளையும்; எதிர்ப்புகளையும் பற்றி அஞ்சாது செயல்படும் அரசியல் துணிச்சல்தான் எங்களின் விலை மதிக்க முடியாத சொத்தாக இருக்கிறது. சூழ்ச்சிகளும், தந்திரங்களும் பாராட்டுக்குரிய செயல்களாக மாறிப் போய்விட்ட அரசியல் உலகில்; நேர்மையும், கொள்கையும் படைக் கருவிகளாக இருப்பதில் எமக்கு ஒரு திருப்தி இருக்கிறது.
பல்லாயிரக்கணக்கான துடிப்புமிக்க தொண்டர்கள், நிர்வாக கட்டமைப்புகள், உள்ளாட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகள், 13 ஆம்புலன்ஸ் சேவை ஊர்திகள், தமிழகமெங்கும் கொடிக்கம்பங்கள், பரவலாக மக்கள் சந்திப்புக்கான அலுவலகங்கள் என உயிரோட்டத்தோடு கடந்த ஆறாண்டு காலமாக; அன்றாடம் பணியாற்றி வருவது மக்களின் நெருக்கத்தையும், நேசத்தையும் பெற்று தந்திருக்கிறது.
ஏழாம் ஆண்டில் பயணத்தை தொடங்கும் இத்தருணத்தில் மனித நேய ஜனநாயக கட்சியின் சொந்தங்களுடன் வாழ்த்துக்களையும், மகிழ்ச்சிகளையும் பகிர்ந்துக் கொள்வதில் பூரிப்படைகிறோம். எங்களுக்கு துணையாக இருந்து வரும் பொதுமக்கள், அரசியலாளர்கள், ஊடகத்துறையினர், சமூகநீதியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், பல்துறை அதிகாரிகள் என அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதுடன், தொடர்ந்து பேராதரவை தருமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
பிப்ரவரி 28,2022 தேதியை 'மஜக கொடி நாள்' என அறிவித்து மனிதநேய சொந்தங்கள் தமிழகமெங்கும் கட்சி கொடிகளை ஏற்றிடுமாறு அறிவுறுத்தியுள்ளோம். இந்நாளில் ஃபாசிசம், பயங்கரவாதம், வன்முறை, ஒடுக்குமுறை ஆகியவற்றுக்கு எதிராகவும், அரசியல் மறுமலர்ச்சிக்காகவும் தொடர்ந்து பாடுபட உறுதியேற்போம் என கேட்டுக் கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.