Skip to main content

'எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கிறோம்' - பாஜக தலைவர் முருகன்

Published on 03/02/2021 | Edited on 03/02/2021

 

 'We accept Edappadi Palanisamy as the Chief Ministerial candidate' - says BJP leader Murugan !!

 

எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என அதிமுக அறிவித்துள்ளது. அக்கட்சியின் முடிவை பாஜகவும் ஏற்கிறது என அக்கட்சித் தலைவர் முருகன் தெரிவித்தார்.

 

சேலம் மாவட்டம் பாஜக மையக்குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் இளைஞர் அணி மாநாட்டு திடலைப் பார்வையிடும் நிகழ்ச்சிக்காக, சென்னையில் இருந்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் செவ்வாய்க்கிழமை (பிப். 2) சேலம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் முருகன் கூறியது:

 

“நாட்டின் வளர்ச்சியையும், தமிழகத்தின் வளர்ச்சியையும் மனதில் கொண்டு மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்தல் நோக்கம் எதுவும் இல்லை.

 

முத்ரா திட்டம், பிரதமர் வீட்டுவசதி திட்டம், பயிர்க் காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு திட்டங்களால் தமிழகம்தான் அதிகளவில் பயனடைந்துள்ளது.

 

சேலம் - சென்னை எட்டுவழிச்சாலைத் திட்டத்தை சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க்கின்றனர். நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே இத்திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

 

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில், தமிழகத்தில் பாஜக அரசியல் நிலைப்பாடு குறித்து தெளிவாக அறிவித்துள்ளார். அதிமுகவுடன் இணைந்து, வரும் சட்டமன்றத் தேர்தலை பாஜக சந்திக்க உள்ளது. ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலின்போது அமைக்கப்பட்ட இந்தக் கூட்டணி தொடர்கிறது. எங்கள் கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கும்.

 

அதிமுக பெரிய கட்சி. அக்கட்சித் தலைமையில்தான் தேர்தலைச் சந்திக்க உள்ளோம். முதல்வர் வேட்பாளரை அதிமுக அறிவித்துள்ளது. அந்த முடிவை நாங்கள் ஏற்கிறோம்.

 

தமிழகத்தின் மீது அக்கறை இருப்பதால்தான் பிரதமர் மோடி, மிகப்பெரிய திட்டங்களை தமிழகத்திற்கு அறிவித்து வருகிறார். ராகுல் காந்தி வருகையில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வளராது. இங்கே 3வது அணி அமையவும் வாய்ப்பு இல்லை.

 

சசிகலா தமிழகம் திரும்பிய பிறகுதான், அவருடைய நிலைப்பாடு என்ன என்பது தெரிய வரும். அதன்பிறகு அரசியல் சூழ்நிலை குறித்து பார்க்கலாம். அதிமுக - அமமுக இணைப்பிற்கு பாஜக முயற்சிக்கவில்லை.” இவ்வாறு பாஜக தலைவர் முருகன் கூறினார்.

 

சார்ந்த செய்திகள்