கள்ளக்காதலியின் கணவரை கூலிப்படையை வைத்து கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த கூட்டுறவு வங்கியின் செயலாளர் நான்கு மாதங்களுக்குப் பிறகு கைதாகியிருக்கிறார்.
நாகை மாவட்டம் தலைஞாயிறு சர்க்கரை ஆலை அருகே உள்ள இளந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவர் கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி டூவீலரில் நாராயணமங்கலம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் காரால் இடித்தும் அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஓரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியபடி நின்றது.
மணல்மேடு போலீசார் சாலை விபத்தாக பதிவு செய்து விசாரணையை மாற்றிவிட்டனர். சில நாட்கள் கழித்து ராஜகோபால் விபத்தில் இறந்துவிட்டார் என காவல்துறை தெரிவித்தது. "அவரை கொலை செய்தவர்களை கடவுள் கூட மன்னிக்காது, கொலை செய்தவனுங்க வயலில் ஓடியதை நாங்களெல்லாம் பார்த்தோம்" என அப்பகுதி மக்கள் பேசியது மயிலாடுதுறையில் டிஎஸ்பி வெள்ளத்துறைக்கு எட்டியது. அவர் களத்தில் இறங்கி விசாரணையை மேற்கொண்டார். விசாரணையில் ராஜகோபாலை கொலை செய்துவிட்டு விபத்து போன்று நாடகமாடியது தெரியவந்தது. பிறகு கொலை வழக்காக மாற்றப்பட்டு கொலை தொடர்பாக மணல்மேடு பகுதியை சேர்ந்த ராஜேஷ், சிவசிதம்பரம் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து அதில் இருவரை கைது செய்தனர்.
இதுகுறித்து விசாரித்ததில் " ராஜகோபால் மனைவி ஷீலாதேவிக்கும் இளந்தோப்பு கூட்டுறவு வங்கியில் செயலாளராக இருந்த அமீர்கான் என்பவருக்கும் கடந்த பல ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்தது. இதையறிந்த ராஜகோபால் தொடர்ந்து கண்டித்திருக்கிறார். சொத்துக்காக ஷீலாதேவி கள்ளக்காதலை விட தயாராக இல்லை. வேறு வழியில்லாமல் பிள்ளைகளின் நலன் கருதி மனைவியின் போக்கிலேயே ராஜகோபாலும் சென்றிருக்கிறார். ஒரு கட்டத்தில் அமீர்கானின் சொத்துக்களை ராஜகோபால் அபகரிப்பதாக நினைத்து அவரை கொலை செய்ய திட்டமிட்டு அதற்காக கர்ணன், சத்யராஜ் உள்ளிட்ட 5 பேரை அமீர்கான் பணம் கொடுத்து கொலை செய்துள்ளார்.
நான்கு மாதங்கள் தலைமறைவாக இருந்த அமீர்கான் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.