தமிழகத்திற்கு வினாடிக்கு 5000 கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டுள்ளது.
அண்மையில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 86 வது கூட்டம் கடந்த 12ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழக தரப்பு அதிகாரிகள் தமிழகத்திற்கு தண்ணீர் வேண்டும் என கோரிக்கை வைத்தனர். எதிர்த்தரப்பான கர்நாடக அரசு அதிகாரிகள், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் நீர்வரத்து குறைந்திருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் தங்களால் தொடர்ந்து தண்ணீர் திறந்து விட முடியாது எனப் பல்வேறு கணக்குகளைக் காட்டினர்.
இறுதியில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் எனக் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு வினித் குப்தா பரிந்துரைத்தார். இருப்பினும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரைப்படி கர்நாடகா தமிழகத்திற்கு நீர் தரவில்லை. இந்நிலையில் டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை வாரியம் ஆணைய கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு வினாடிக்கு 5000 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழ்நாடு அனைத்து கட்சி எம்.பிக்கள் குழு மத்திய அமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளது. இதனிடையே காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் வினித் குப்தா, காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் ஆகியோர் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். காவிரி ஆணைய கூட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சரிடம் இந்த சந்திப்பில் அறிக்கை வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.