2021-ஆம் ஆண்டு, ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்றப் பொதுத்தேர்தல் தமிழகத்தில் நடைபெறவுள்ளது. தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டது. தேர்தல் நடத்த வாக்கு இயந்திரங்களைப் பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு அனுப்பும் நடைமுறையைத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மற்றும் சங்கிலி ஆகிய மாவட்டங்களிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இராணிப்பேட்டை மாவட்டத்தில், தேர்தல் பயன்பாட்டுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, அந்த மாநிலத்தில் இருந்து இராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த (வருவாய்த்துறையில்) தேர்தல் வட்டாட்சியராகச் செயல்படும் கோபாலகிருஷ்ணன் மற்றும் தாசில்தார் மதிவாணன் தலைமையில், 11 பேர் கொண்ட இரண்டு அதிகாரிகள் குழு, காவல்துறை பாதுகாப்புடன் அங்கிருந்து வாகனத்தில் எடுத்து வந்தனர்.
அப்படி எடுத்துவரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கிளாஸ்டன் புஷ்பராஜ் முன்னிலையில், இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது.
மகராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரத்தின் பேலட் யூனிட் 2,530, கண்ட்ரோல் யூனிட் 1,930, வி.வி.பாட் 2,090 எண்ணிக்கையில் பெறப்பட்டு பார்கோட் ஸ்கேனிங் மூலம் சரி பார்க்கப்பட்டு விளக்கப்பட்டன. இந்த வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பு அறையில் வைத்ததோடு, அந்த கட்டிடத்துக்குள் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளை அழைத்துச் சென்று அதன் பாதுகாப்பு அம்சத்தையும் தெரிவித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பு அறையில், 24 மணிநேரமும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு மற்றும் சி.சி.டி.வி கண்காணிப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் விளக்கினார்.
அந்த இயந்திரங்கள் இறக்கி வைக்கப்பட்டபின்னர் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வைப்பு அறைக்கு அனைவர் முன்னிலையிலும் சீல் வைக்கப்பட்டது. இதில், அ.தி.மு.க சார்பில் மா.செ ரவி எம்.எல்.ஏ, தி.மு.க சார்பில் மா.செ காந்தி எம்.எல்.ஏ, ம.தி.மு.க சார்பில் மா.செ உதயகுமார் உட்பட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.