Skip to main content

கருப்புக்கொடிக்கு கவலைப்படாத வீரமான பிரதமர்! -அமைச்சரின் ‘சைனா; மைனா’ தேசப்பற்று!

Published on 01/03/2019 | Edited on 01/03/2019

 

விருதுநகரில் நடந்த சுகாதார திருவிழாவில் கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசு சார்பில் வளைகாப்பு சீர் செய்யப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்ட தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி  செய்தியாளர்களைச் சந்தித்தபோது அளித்த பேட்டி இதோ - 

 

k

 

மோடி பி.ஜே.பி.யில் இருக்காரு. அவர் எங்க கட்சியில் ஒண்ணும் தலையிட மாட்டாரு. வைகோ மோடிக்கு கருப்புக்கொடி காட்டுவதற்கெல்லாம் மோடி கவலைப்பட மாட்டாரு. மோடியோட நினைப்பெல்லாம், இந்தியாவை வல்லரசு ஆக்கவேண்டும், இந்தியாவை ஒரு வலிமையான நாடாக்க வேண்டும், இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக யார் இருந்தாலும், அவர்களுக்கு துப்பாக்கி முனையில் பதில் சொல்ல வேண்டும் என்பதுதான்.  அடிப்படையிலேயே மோடி வீரமாக செயலாற்றிக் கொண்டிருக்கிறார். வீரமான பிரதமராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். ஆகவே, அவர் வைகோ கருப்புக்கொடி காட்டுவதைக் கண்டுகொள்ள மாட்டார். 

 

எடப்பாடி ஆட்சியினுடைய சிறப்பை தமிழக மக்கள் மட்டுமல்ல.. உலகத் தமிழர்கள் அத்தனைபேரும் விரும்புகிறார்கள். எடப்பாடியோட தொலைநோக்கு பார்வையில் தப்பு நடப்பதற்கு வாய்ப்பில்லை. ஏழை மக்களுக்கு அவர் அறிவிக்கின்ற திட்டங்கள் சரியாகப் போய்ச்சேரும். எதுவந்தாலும், எப்போது வந்தாலும் போர்க்களத்திலே நாங்கள் ஒப்பாரி வைக்கமாட்டோம். திமுகவினர்தான் ஒப்பாரி வைப்பார்கள். நாங்கள் கர்ஜிப்போம். போர்முனையில் எங்களுக்கு ஒப்பாரிக்கு வேலையே கிடையாது. எங்கள் தொண்டர்கள் கர்ஜிக்கக்கூடியவர்கள். மதம்கொண்ட யானை விரட்டி வந்தாலும்கூட அதை சினம் கொண்ட சிங்கமாக பாய்ந்து வெற்றி நாட்டக்கூடிய மறவர்கள் கூட்டம் அதிமுக கூட்டம். 

 

k

 

விதியை மீறுகின்ற செயலை பாகிஸ்தான் செய்தால் பல பிரச்சனைகளை பாகிஸ்தான் சந்திக்க வேண்டியதிருக்கும். மோடி கண்ணசைத்தால் பாகிஸ்தான் இருக்கிற இடம் தெரியாமல் போய்விடும். தவறான செயல்களை பாகிஸ்தான் தொடர்ந்து செய்துவருகிறது. ஆகவே, சைனாவா இருந்தாலும் சரிதான், மைனாவாக இருந்தாலும் சரிதான். நம்முடைய ஆட்சியை,  இந்திய அரசாங்கத்தை எதிர்க்கக்கூடிய எந்த அரசாக இருந்தாலும் சரி, எந்த நாடாக இருந்தாலும் சரி, அருமைத்தலைவர் பிரதமர் மோடி எடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கு, எடப்பாடியின் தமிழ்நாடு அரசு முழுமையாக வலிமையாக ஆதரவு தரும். நாங்கள் இதைக் கூட்டணிக்காகச் சொல்லவில்லை. தேசத்தின் மீதான பற்றின் அடிப்படையில் சொல்கிறோம். மோடி உண்மையான ஒரு அசல் வித்து. இப்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் மோடிதான் திரும்பவும் பிரதமராக வரவேண்டும். இந்தியாவை மோடி ஆளவேண்டும்; தமிழகத்தை எடப்பாடி ஆளவேண்டும். 


 

சார்ந்த செய்திகள்