கிருஷ்ணகிரியில், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத் துணைத்தலைவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிச்சென்ற கும்பல் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் வாஞ்சி என்கிற சதீஷ் (40). வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். மேலும், எம்.எல்.ஏ.வும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற மாவட்ட துணைத் தலைவராகவும் இருந்து வருகிறார். டிச. 8 ஆம் தேதி இரவு சதீஷ், அவருடைய மனைவி ராதா, மாமியார் லட்சுமி, மகள் கவிஸ்ரீ ஆகியோர் வீட்டில் இருந்தனர். இரவு 10 மணியளவில் 7 பேர் கொண்ட கும்பல் அவருடைய வீட்டுக்கு வந்தனர். அந்த கும்பல் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்து இருந்த பெட்ரோல் குண்டுகளை எடுத்து வீட்டின் மீது வீசி விட்டு தப்பியோடியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சதீஷும் அவரது குடும்பத்தினரும் உடனடியாக கிருஷ்ணகிரி தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து சென்று விசாரித்தனர். சதீஷின் வீட்டு வாயில் கதவு முன்பு பத்துக்கும் மேற்பட்ட பெட்ரோல் குண்டுகள் கிடந்தன. நல்வாய்ப்பாக எதுவும் வெடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளைக் கொண்டு பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.