கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைத்தது. மேலும் சில நாட்களாக கத்திரி வெயிலின் தாக்கத்தால் மக்கள் வெளியில் தலைகாட்டவே அச்சப்பட்டனர். இந்நிலையில் நேற்று இரவு விருத்தாசலம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடுமையான இடியுடன் கூடிய பலத்த காற்று வீசியதுடன், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழை பொழிந்தது.

இந்த கோடைமழையால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். அதேசமயம் விருத்தாசலம் அருகில் சின்னவடவாடி கிராமத்தில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமாகியுள்ளது.

சேதமடைந்துள்ள வாழை இலை, வாழை பூ ,வாழை தார் உட்பட ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், வேளாண் துறை அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு இழப்பீட்டுக்கு தகுந்த நிவாரண உதவி வழங்க வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
