விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ளது மேல்பாக்கம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைராஜன் (26). கூலித் தொழிலாளியான இவர், தற்போது திண்டிவனம் பாரதிதாசன் நகரில் வாடகை வீட்டில் வசித்துவருகிறார். அங்கிருந்தபடி வேலைக்குச் சென்று சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றிவருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் (04.09.2021) தனது சொந்த ஊரான மேல் பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்காக அவரும் அவரது மனைவியும் வீட்டைப் பூட்டிவிட்டு சென்றுள்ளனர். மீண்டும் மறுநாள் காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பூட்டப்பட்ட வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்துள்ளது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கலைராஜன் தம்பதி, உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், ரூ. 21,000 பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு 4 லட்சம் ரூபாய் என கூறுகின்றனர். இதுகுறித்து ரோசனை போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார் விசாரணை செய்தபோது, கலைராஜனின் பூட்டிய வீட்டுக்குள் கொள்ளையர்கள் கள்ளச்சாவி போட்டு வீட்டை திறந்து உள்ளே சென்று கொள்ளையடித்து தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களைத் தீவிரமாக தேடிவருகின்றனர். இந்நிலையில், திண்டிவனம் நகர பகுதியில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுவருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.