Skip to main content

“தன்னாட்சி அதிகாரமற்ற காவிரி மேலாண்மை வாரியம் விசை ஒடிந்த அம்பு”க்கு சமமானது - ஸ்டாலின் 

காவேரி பிரச்சனையில் தற்போது உருவகப்போகவிருக்கும் ''தன்னாட்சியற்ற காவேரி மேலாண்மை வாரியம்'' வெறும் விசை ஒடிந்த அம்பாக இருக்கும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்


“காவிரி வரைவுத்திட்டத்தை ஆறுவார காலத்திற்குள் உருவாக்குங்கள். எவ்வித காலஅவகாசமும் கொடுக்கப்பட மாட்டாது”, என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்திய பிறகும், ஆள், அம்பு, சேனை என எல்லாவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ள பேரரசை கையிலே வைத்துக்கொண்டு, ஒரு வரைவுத்திட்டத்தை உருவாக்க மூன்று மாத கால தாமதத்தை மத்திய அரசு செயற்கையாக உருவாக்கியிருப்பது தமிழக நலனை அடியோடு புறக்கணிப்பதாக அமைந்துள்ளது. மே 8 ஆம் தேதி “மத்திய அரசு நீதிமன்ற அவமதிப்பு செய்கிறது. ஆகவே காவிரி வரைவுத் திட்டத்துடன் மத்திய நீர்வளத்துறை செயலாளர் 14 ஆம் தேதி ஆஜராக வேண்டும்”, என்று உச்சநீதிமன்றம் அறுதியிட்டு கூறிய பிறகும் கூட, அன்றைய தினம் ஆஜரான நீர்வளத்துறைச் செயலாளர், “இதுதான் காவிரி வரைவுத்திட்டம். இதை அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டுமா அல்லது உச்சநீதிமன்றமே பரிசீலிக்கிறதா”, என்று ஒரு கேள்வியை உச்சநீதிமன்றத்தைப் பார்த்து எழுப்புகிறார் என்றால், மத்திய பா.ஜ.க. அரசு உச்சநீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பை அமல்படுத்துவதில் எவ்வளவு தூரம் முரண்டு பிடிக்கிறது என்பது தெரிகிறது.
 

stalin

 

“வாரியமோ, ஆணையமோ எந்தப் பெயரை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். எங்களுக்கு ஆட்சேபனை இல்லை”, என்று வரைவுத் திட்டத்தைக் கொடுத்துவிட்டு மத்திய அரசு சொல்கிறது என்றால், இதே மத்திய நீர்வளத்துறைச் செயலாளர், “காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையே உச்சநீதிமன்றத்  தீர்ப்பில் இல்லை”, என்று முன்பு கூறியது ஏன்? காவிரி நடுவர்மன்றம் தனது இறுதித்தீர்ப்பில் “Eminent Engineer" ஒருவர் காவிரி மேலாண்மை வாரியத்தின் தலைவராக இருக்க வேண்டும் என்று தெளிவாக கூறியிருக்கிறது. ஆனால் வரைவுத்திட்டத்தில் “இஞ்ஜினியர்” அல்லது “அதிகாரி” தலைமை என்று குறிப்பிட்டிருப்பது ஏன்? இப்போது தமிழக அரசின் சார்பிலும் காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பை வலியுறுத்தாமல் திடீரென்று, “ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்க வேண்டும்”, என்று கூறியதன் பின்னணி என்ன?

 

“காவிரி மேலாண்மை வாரியம் தன்னாட்சி மிக்க அமைப்பாக இருக்க வேண்டும்”, என்று காவிரி நடுவர்மன்றம் குறிப்பிட்டுள்ளது.ஆனால் ''தன்னாட்சி அமைப்பு'' என்பது  பற்றி ஏன் தமிழக அரசு வாய்திறக்கவில்லை

 

தமிழக அரசின் சார்பில் வரைவுத் திட்டத்தின்படி அமைக்க வேண்டிய வாரியத்திற்கு என்ன அதிகாரம்? அதை வரைவுத்திட்டத்தில் தெளிவு படுத்துங்கள் என்று ஏன் உறுதிபட வாதிடவில்லை? தமிழகத்திற்கு குறைக்கப்பட்ட 14.75 டி.எம்.சி தண்ணீரை எந்த மாதத்தின் ஒதுக்கீட்டில் இருந்து குறைக்கப் போகிறார்கள்? தமிழகத்தில் விவசாயத்திற்குத் தண்ணீர் திறக்க வேண்டிய மாதத்தில் வரும் ஒதுக்கீட்டிலிருந்து, குறைத்து விடாமல் இருக்க இந்த வரைவுத்திட்டத்தில் என்ன பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது? இதுபற்றி எல்லாம் தமிழக அரசு கேள்வி எழுப்பாததற்கு என்ன காரணம்? இன்றைக்கும் உச்சநீதிமன்றம் மீண்டும் தலையிட்டு, சில திருத்தங்களைச் செய்து, காவிரி வரைவுத்திட்டத்தை நாளை மீண்டும் தாக்கல் செய்யுங்கள் என்று உத்தரவிட்டிருக்கிறது.

 

stalin

 

அந்த வரைவுத் திட்டத்திலாவது காவிரி நடுவர் மன்றம் சுட்டிக்காட்டிய “தன்னாட்சி அதிகாரமிக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா”, “தீர்ப்பை நிறைவேற்றும் அதிகாரம் அந்த வாரியத்திற்கு இருக்குமா” என்ற மிக முக்கியமான கேள்வி எழுந்திருக்கிறது. ஆகவே, மத்திய பா.ஜ.க. அரசும், அதிமுக அரசும் கைகோர்த்துச் செயல்படுவதால், தமிழகத்தின் உரிமைகள் தொடர்புடைய மிக முக்கியமான வரைவுத் திட்டத்தைத் தாக்கல் செய்வதற்கு முன்பு கருத்துக்களைத் தெரிவிப்பதற்குக் கூட அனைத்துக் கட்சிக் கூட்டத்தையோ, விவசாய சங்கப் பிரதிநிதிகளையோ, முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி அழைத்துப் பேசாமல், ஜனநாயக நெறிமுறைகளுக்குப் புறம்பாக தன்னிச்சையாகச் செயல்பட்டிருப்பது, கண்ணும் காதும் வைத்தது போல் தமிழகத்தின் காவிரி உரிமையை மத்திய அரசிடம் தாரை வார்த்து, அதிகாரமில்லாத ஒரு குழுவை, "காவிரி மேலாண்மை வாரியம்”, என்ற பெயரில் அமைத்து, அந்தப் பெயரைக் கண்டே எல்லோரும் ஏமாந்து போவார்கள் என்ற நப்பாசையில், உடன்படுகிறார் என்ற சந்தேகம் எழுகிறது.

 

அதனால் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பின் அடிப்படையில், அதிகாரம்மிக்க அதாவது காவிரி நடுவர் மன்றத்தீர்ப்பில் உள்ளவாறு தன்னாட்சிமிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய பா.ஜ.க. அரசு நாளை தாக்கல் செய்யும் வரைவுத்திட்டத்தில் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 

எல்லாவற்றையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற ஏகபோக எண்ணத்துடன் இயங்கும் மத்திய அரசு ஊதும் மகுடிக்கு ஏற்றபடி ஆட்டம்போடும் பெட்டிப் பாம்பு போல் அதிமுக அரசு அடங்கி, முடங்கிக் கிடக்காமல், தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைய உரிய அழுத்தத்தை மத்திய அரசுக்கும், மூத்த வழக்கறிஞர்கள் மூலம் உறுதியான வாதத்தை உச்ச நீதிமன்றத்திலும் நாளைய தினம் வலிமையாக  எடுத்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தன்னாட்சி அதிகாரம் இல்லாத மேலாண்மை வாரியம் என்பது, உள்ளீடற்ற வெறும் கூடு போன்றதும் விசை ஒடிந்த அம்பைப் போன்றதுமானது. இதை இப்போதாவது உணரவில்லை என்றால், அதுவே பெரும் பிழையாகி, சரித்திரத்தின் சாபத்திலிருந்து தப்ப முடியாது என கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

சார்ந்த செய்திகள்