கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகேயுள்ள கார்மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது பெண்ணிற்கும் திருமணம் நடப்பதாக சிதம்பரம் சப்-கலெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவுக்கிணங்க மாவட்ட சைல்டு லைன் ஆலோசகர் பார்த்தீபராஜ் மற்றும் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது கார்மாங்குடியில் உள்ள மணமகன் வீட்டில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. மணமகன் சிறுமியின் கழுத்தில் தாலி கட்டுவதற்கு முன்பு சென்ற அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி அடையவில்லை என்பதும், ஒன்பதாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருப்பதாகவும் தெரிய வந்தது.
இந்நிலையில் ''18 வயதுக்குக் குறைந்த சிறுமிக்குத் திருமணம் நடத்துவது சட்டப்படி குற்றம், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்", என எச்சரித்துத் திருமணத்தை நிறுத்திய சமூக நலத்துறை மற்றும் காவல்துறையினர் பெண் - மாப்பிள்ளை இரு வீட்டாரையும் கடலூர் மாவட்ட சமூகநலத்துறை அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிட்டனர்.
நடக்க இருந்த குழந்தை திருமணத்தை சமூக நலத்துறை அலுவலர்கள் தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.