திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சி 36 வார்டுகளை கொண்டது. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக 21, அதிமுக 5, பாஜக 1, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மமக, விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சுயேட்சைகள் 8 என வெற்றி பெற்றன. தனித்து நகர் மன்றத் தலைவர், நகர் மன்றத் துணை தலைவர் பதவியை பிடிப்பதற்கான பலத்தோடு ஆளுங்கட்சியான திமுக உள்ளது. இதனால் நகர் மன்றத் தலைவர் பதவியை பிடிக்க திமுகவில் பலத்த போட்டி நிலவியது.
நகர் மன்றத் தலைவர் பதவி பொதுப்பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. ஆம்பூர் நகர திமுக கமிட்டி, மாவட்ட சிறுபான்மை அணி நிர்வாகியான கவுன்சிலர் ஷப்பீர் அகமதுவை சேர்மனாக்க வேண்டும் என மொழிந்தது. ஆம்பூரில் பிரபலமான தனியார் காலணி தொழிற்சாலை உரிமையாளர் எந்த ஆட்சியாக இருந்தாலும் ஆம்பூர் சேர்மன் யார் என்பதை அவர்தான் தீர்மானிப்பார். அவர் திமுகவை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் கவுன்சிலர் ஏஜாஸ் அகமதுவை சேர்மனாக்க வேண்டும் என முயற்சியெடுத்தார்.
ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ வில்வநாதன், மாவட்ட கழக திமுக பொறுப்பாளர் தேவராஜ் எம்.எல்.ஏ, வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் போன்றோர் கம்பெனி தரப்புக்கு ஆதரவாக இருந்ததாக கூறப்படுகிறது. திமுக தலைமை சேர்மன் வேட்பாளருக்கான பட்டியலை அறிவித்தபோது நகர கமிட்டியின் விருப்பத்தை மீறி கம்பெனிகள் விரும்பிய கவுன்சிலர் ஏஜாஸ்அகமது பெயரை வெளியிட்டிருந்தது. இது ஆம்பூர் நகர தி.மு.க.வில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.
திமுக தலைமையின் அறிவிப்பை மீறி தாங்கள் வேட்பாளரை நிறுத்துவது என முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து மார்ச் 4-ஆம் தேதி ஆம்பூர் நகர் மன்ற அலுவலகத்தில் நகரமன்றத் தலைவருக்கான தேர்தல் பணிகள் தொடங்கியது. திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் ஏஜஸ் அகமது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் அதேபோல் ஆம்பூர் நகரம் கழகத்தின் விருப்பமான கவுன்சிலர் சபீர் அகமது போட்டியாக சேர்மனுக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்தார். தேர்தல் நடைபெறும் பகுதிக்கு திமுக எம்.எல்.ஏ. வில்வநாதன், எம்.பி. கதிர் ஆனந்த் போன்றோர் வருகை தந்தனர். எம்.பி.யும், எம்.எல்.ஏ.வும் நகராட்சி வளாகத்தைவிட்டு வெளியேற வேண்டுமென திமுகவின் ஒரு தரப்பினர் கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியே பரபரப்பானது, காவல்துறை பாதுகாப்பு வழங்க அங்கிருந்து எம்.பி.யும் எம்.எல்.ஏ.வும் வெளியேறினர்.
பின்னர் நகர் மன்றத் தலைவருக்கான தேர்தல் தொடங்கியபோது ஒவ்வொரு கவுன்சிலராக வாக்களிக்க ஏற்பாடு செய்தனர் அதிகாரிகள். அப்போது சேர்மன் தேர்தலில் நிற்கும் சபீர் அகமது எதற்கும் பயப்படாமல் எனக்கு வாக்களியுங்கள் என கேட்டார். அப்பொழுது ஒரு கவுன்சிலர் தனது வாக்கை செலுத்தி இருந்தார். வாக்களிக்கும் இடத்தில் எப்படி வாக்கு கேட்கலாம் என திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் ஏஜாஸ் அகமது பிரச்சனை செய்ததால் தேர்தல் நிறுத்தப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. தேர்தலை நடத்துங்கள் என கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.