இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு தற்பொழுது நிலவுக்கு மிக அருகில் சென்றது. தொடர்ந்து இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்துள்ளது.
நாடு முழுவதும் இந்த வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். பல்வேறு அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சந்திரயான் 3 விண்கல திட்டத்தில் திட்ட இயக்குநராகப் பணியாற்றிய தமிழகத்தின் விழுப்புரத்தைச் சேர்ந்த விஞ்ஞானி வீரமுத்துவேலுவிற்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இதையடுத்து, விஞ்ஞானி வீரமுத்துவேலுவை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சந்திரயான் வெற்றி தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல உலக அளவில் இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்துள்ளது என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் விஞ்ஞானி வீரமுத்துவேல் சந்திரயான் 3-ன் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டபோது அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், “இந்த வாய்ப்பு கொடுத்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரைக்கு ரொம்ப பெரிய நன்றி. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் விழுப்புரம். படித்தது ஒரு அரசுப் பள்ளியில். பள்ளியில் படிக்கும் போது நான் ஒரு ஆவ்ரேஜ் மாணவன் தான். அடுத்து என்ன படிக்க வேண்டும், எங்க படிக்க வேண்டும் என்ற ஒரு ஐடியாவும் இல்லை. என்னுடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் யாருக்கும் அவ்வளவாகக் கல்வி அறிவு கிடையாது. நண்பர்களுடன் சேர்ந்து டிப்ளோமோ இன் மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் சேர்ந்து படித்தேன். படிக்கும் போது இன்ஜீனியரிங் படிப்பின் மீது ஆர்வம் வந்ததால் நல்லா படிச்சு 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் வாங்கினேன். அடுத்து மெரிட்ல தனியார் கல்லூரியில் பி.இ படித்தேன். நன்றாக படித்தேன். அதற்காக எல்லா நேரமும் படித்துக்கொண்டிருக்க மாட்டேன். படிக்கும் போது கவனமாகப் படிப்பேன்” என்று தனது ஆரம்பக்கால படிப்பு முதல் தான் எப்படி இஸ்ரோவில் சேர்ந்தது வரை கூறியிருந்தார்.
மேலும், “நான் ஒரு சாதாரண மனிதன்; என்னால இந்தளவுக்கு வரமுடியுது என்றால், எல்லாராலும் வரமுடியும். வாய்ப்புகள் எல்லாருக்கும் இருக்கிறது. அதனை நாம் பயன்படுத்தும் விதத்தில்தான் இருக்கிறது” எனவும் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.