எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதியவர்களை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தாக்கி, பூட்ஸ் கால்களால் எட்டி உதைக்கும் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதிமுகவின் நிறுவனத் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அவரது கட்சி தொண்டர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னை துறைமுகம் தொகுதி கொத்தவால்சாவடி மேற்கு தொகுதி செயலாளர் வெற்றிலை மாரிமுத்து சார்பில் ஆயிரம் ஏழைப் பெண்களுக்கு சேலைகளும், 5000 பேருக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பொழுது முதியவர்கள் பலர் முந்தியடித்துக் கொண்டு உணவை வாங்க முற்பட்டனர்.
அப்பொழுது கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த திணறிய போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். அப்பொழுது ஆத்திரமடைந்த காவல் உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் முதியவர்கள் என்று கூட பார்க்காமல் பலரை தரதரவென இழுத்துச் சென்று கீழே தள்ளிவிட்டதோடு, ஒரு முதியவரை கீழே தள்ளி பூட்ஸ் காலால் மார்பில் எட்டி மிதித்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.