கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சங்கர், நாராயணன், மோகன் உள்ளிட்ட மூவரும் கோயில்களில், தங்கிக்கொண்டு பிளாஸ்டிக் பூக்கள், கண்ணாடியிலான பொருட்களை பல்வேறு பகுதிகளில் விற்று வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று விருத்தாச்சலம் ஸ்டேட் பேங்க் அருகில் அசோக் குமார் என்பவரிடம் தங்கச்செயின் என்று கூறி இம்மூவரும் விற்க முயன்றனர். அந்நகைகளை பார்த்த அசோக்குமார், அதனை பரிசோதித்த போது, பித்தளையில் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகள் என்பதை அறிந்ததும், அவர்களை பிடிக்க முற்பட்ட போது சங்கர் என்பவர் மட்டும் பிடிபட்டார்.
பின்னர் விருத்தாச்சலம் காவல்துறையினருக்கு புகார் அளித்ததன் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் சங்கரை கைது செய்து அவருடன் விசாரணை மேற்கொண்டதில் அவருடன் இருந்த மற்ற இருவரையும் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
இவ்விசாரணையில் தங்களுக்கு போதுமான வருமானம் இல்லை என்பதால், பித்தளை செயினை தங்க செயின் என்று கூறி ஏமாற்றி விற்க முயன்றதாக கூறியுள்ளனர். பின்னர் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.