விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோவிலுக்குள் அதே ஊரைச் சேர்ந்த பட்டியலின மக்களை வரவிடாமல் மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் அந்தக் கோயிலில் வழிபட வந்த கதிரவன் என்ற பட்டியலின இளைஞரை அங்கிருந்த மற்றொரு பிரிவினர் கடுமையாகத் தாக்கியுள்ளனர். மேலும், கதிரவன் தாக்கப்பட்டது தொடர்பாக நியாயம் கேட்க வந்தவர்களும் தாக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
மேலும், இந்தக் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் என்பதால் இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையாகியது. இதனால் பட்டியலின மக்களை வழிபட அனுமதிக்காதது குறித்து விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனாலும் பட்டியலின மக்களைக் கோயிலுக்குள் விடவே முடியாது என மற்றொரு தரப்பினர் தீவிரம் காட்டி வருகின்றனர். ஒரே ஊரில் வசிக்கின்ற சக தமிழர்களைக் கோவிலுக்குள் அனுமதிக்காத நிலையைக் கண்டித்து அரசியல்வாதிகளும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து கண்டனங்களைப் பதிவு செய்து வந்தனர். இதைத் தொடர்ந்து, பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்படாததால், கோவிலுக்குள் யாரும் செல்லக்கூடாது என்று கூறி மாவட்ட நிர்வாகம் கடந்த ஜூன் மாதம் கோவிலைப் பூட்டுச் சீல் வைத்தது.
இந்த நிலையில் மேல்பாதி கிராமத்தில் நேற்று இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் இருவரை போலீசார் விசாரணைக்காகக் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து போலீசார் பிடித்துச் சென்றவர்களை உடனடியாக விடுவிக்க கோரி மேல்பாதி கிராமத்தினர் நள்ளிரவில் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஷஷாங்க் சாய் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கலைந்து போகச் செய்தார். இருப்பினும் தொடர்ந்து அக்கிராமத்தில் பதற்றம் நிலவுவதால், நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு இரவு முதல் பாதுகாப்புப் பணியிலிருந்து வருகின்றனர்.