கடந்த எட்டு நாட்களாக நடந்த வருமான வரிச் சோதனை, 18 மணி நேரங்களுக்கு மேலாக நடந்த அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அமைச்சர்கள், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் நேற்று செந்தில் பாலாஜியை சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட முறையீடு, பிற்பகல் விசாரணைக்கு வந்தது. முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி மருத்துவமனை வளாகத்திற்கே சென்று விசாரணை நடத்தி 28 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிகிச்சையில் உள்ள செந்தில் பாலாஜியை குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்படுபவர் என புழல் சிறை நிர்வாகம் தெரிவித்திருந்தது. அமைச்சர் சேகர்பாபு செந்தில் பாலாஜியை சந்திக்கச் சென்றிருந்த நிலையில் அவருக்கு அனுமதி அளிக்க மறுத்த புழல் சிறை நிர்வாகம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தது. இந்நிலையில் புழல் சிறை நிர்வாகம் செந்தில் பாலாஜிக்கான விசாரணைக் கைதி எண்ணைத் தெரிவித்துள்ளது. அதில் 001440 என்ற பதிவேட்டு எண் வழங்கப்பட்டுள்ளது.