தந்தையை இழந்த மாணவியின் கல்லூரிக்கால படிப்புச் செலவை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஏற்றுக்கொண்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவின்போது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அதிகத்தூர் என்ற கிராமத்தைத் தத்தெடுப்பதாக அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் அறிவித்தார். அதோடு சேர்த்து அக்கிராமத்தில் பல்வேறு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கும் ஏற்பாடுகள் செய்துள்ளார்.
இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த மாணவி சுனிதா என்பவரின் கல்விச் செலவை ஏற்றுக்கொள்வதாக கமல்ஹாசன் உறுதியளித்துள்ளார். சுனிதா சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர். தாயின் அரவணைப்பில் வசித்து வந்த அவர் வறுமையின் பிடியில் சிக்கியிருந்தாலும் பள்ளிப்படிப்பை முழுமையாக முடித்துள்ளார். தற்போது தனது கல்லூரிப் படிப்பிற்காக நடிகர் கமல்ஹாசனைத் தொடர்புகொண்டபோது இந்த உதவி கிடைத்துள்ளது. சுனிதா தனியார் கல்லூரியில் வரலாறு பாடப்பிரிவில் சேருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.