![villupuram district incident police investigation started](http://image.nakkheeran.in/cdn/farfuture/36Aw22feUAPAT3Z0JbZgRmj954nQxEmW8FccYGeqozM/1671781880/sites/default/files/inline-images/art-img-police-siren_7.jpg)
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பூசாரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கும் புதுச்சேரி திருபுவனை பாளையத்தைச் சேர்ந்த ரம்யாவிற்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இடையே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில், தோழியைச் சந்திக்கப் போவதாக கண்ணனை அழைத்து சென்ற ரம்யா வேடசந்தூரில் உள்ள கோவில் ஒன்றில் வைத்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான 3 மாதங்களுக்குப் பிறகுதான் ரம்யாவுக்கும் விழுப்புரத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் திருமணம் நடந்தது கண்ணனுக்கு தெரியவந்தது. இருப்பினும், கண்ணன் ரம்யாவுடன் குடும்பம் நடத்தி வந்தார். கர்ப்பமடைந்த ரம்யாவுக்கு வளைகாப்பு செய்து அவரின் தாய் வீட்டிற்கு கண்ணன் அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து, குழந்தை இறந்து பிறந்ததால் அடக்கம் செய்துவிட்டதாக கண்ணனிடம் ரம்யா தெரிவித்திருக்கிறார். அதனால் கண்ணன் ஒரு மாதம் ரம்யாவை தாய் வீட்டிலேயே இருக்க வைத்து விட்டுச் சென்றிருக்கிறார். அதன்பின் ஒரு மாத காலம் ஆன பிறகு ரம்யாவை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல கண்ணன் வரவே, ரம்யா ஏமாற்றி விட்டு தலைமறைவாகி உள்ளது தெரியவந்தது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டு இருந்த கண்ணன் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த பைக்கில் புதிதாக ஒரு இளைஞருடன் தனது மனைவி ரம்யா செல்வதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே அந்த பைக்கை வழிமறித்து விசாரித்த போது ரம்யா கண்ணனை பார்த்து யார் நீ எனக் கேட்டுள்ளார். இவ்விவகாரம் காவல்நிலையம் சென்றதையடுத்து, இதுகுறித்து போலீசார் விசாரித்தபோது, நான் கண்ணனோடு இருந்த போது கர்ப்பமாகவில்லை. அது வெறும் நீர்க்கட்டி என ரம்யா தெரிவித்திருக்கிறார். இதனிடையே மூன்றாவது திருமணம் செய்து கொண்ட இளைஞர் ரம்யாவிற்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடைபெற்றது தனக்குத் தெரியாது எனத் தெரிவித்துள்ளார்.
இதை அனைத்தையும் கேட்டுக்கொண்ட போலீசார் ரம்யாவின் மருத்துவப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருக்கின்றனர். பட்டதாரியான இந்த இளம் பெண் மூன்று வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.