விழுப்புரம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது பிரபல வணிக நிறுவனம். கடந்த 12 ஆம் தேதி அந்நிறுவனம் செயல்படும் கட்டடத்திற்குள் வெடிகுண்டு வைத்திருப்பதாக அடையாளம் தெரியாத நபர் மிரட்டல் விடுத்தார். இந்நிலையில் தகவல் அறிந்த விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் காமராஜர் தலைமையில் போலீசார் வெடிகுண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் கட்டடத்தில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. பின்னர் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று(17.10.2023) மீண்டும் அதே நபர், அதே வணிக வளாகத்திற்கு தொலைப்பேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிய வந்தது. அதன் அடிப்படையில் மர்ம நபரை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து, தேடப்பட்டது. மேலும் கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப உதவியுடன் சைபர் கிரைம் போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம ஆசாமி விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் புது தெருவைச் சேர்ந்த வாலிபர் பிரபாகரன்(26) என்பதைக் கண்டுபிடித்து கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சில தினங்களுக்கு முன்பு அந்த வியாபார நிறுவனத்திற்கு பொருட்கள் வாங்க வந்ததாகவும், அப்போது அவர் வைத்திருந்த 7000 ரூபாய் பணம் காணாமல் போய்விட்டது. அந்த பணம் எப்படி திருடு போனது என்பது குறித்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கண்டுபிடிக்குமாறு பிரபாகரன் கேட்டதாகவும் அதற்கு ஷாப்பிங் மால் மேலாளர் மறுத்துவிட்டார் என்றும் பணம் பறிபோன விரக்தியின் காரணமாக அந்த கட்டடத்துக்கு அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ளார். இதையடுத்து பிரபாகரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸ் பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அவரை சிறையில் அடைத்தனர்.