புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் புவனகிரி ஒன்றிய செயலாளர் மணி தலைமையில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கீழ் வளையமாதேவி கிராம பொதுமக்கள் 20க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர்
அந்த மனுவில், கீழ்வளையமாதேவி கிராமத்தில் 35க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் கடந்த 33 ஆண்டுகளாக மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாமல் வசித்து வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பலமுறை மனு கொடுத்தும் நேரில் வலியுறுத்தியும் கடலூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது மழை தொடர்ந்து விட்டுவிட்டுப் பெய்து வருவதால், சாலைகள் சேரும் சகதியுமாக நடக்க முடியாத சூழ்நிலையில், கீழ் வளையமாதேவி பகுதி முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட பகுதியாக உள்ளது.
எனவே இப்பகுதியில் வசிக்கும் 35க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மின்சார வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்நிகழ்வில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் கீழ்வளையாமதேவி கிளை தலைவர் பழனிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.