
பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கிய நிலையில் நேற்று (05.02.2021) தேதி குறிப்பிடாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. நடைபெற்ற கூட்டத் தொடரில் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம், ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை உள்ளிட்ட 8 மசோதாக்கள் வாய்மொழியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்திருந்தார்.
அதேபோல் 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காவலர்களைத் தாக்கியது, வாகனத்தை எரித்தது போன்ற வழக்குகளைத் தவிர மற்ற வழக்குகள் வாபஸ் பெறப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது பதியப்பட்ட வழக்குகளின் குற்றங்களின் தீவிரம் குறித்த கணக்கெடுப்பை சென்னை காவல் ஆணையர் தொடங்கியுள்ளார். வழக்குப் பதிவு செய்யப்பட்ட விவரங்களும் கணக்கிடப்படுகிறது என சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர் அறிவித்தபடி விரைவில் ஜல்லிக்கட்டு போராட்டம் வழக்குகள் ரத்து செய்யப்படும் எனவும் காவல் ஆணையர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.