கரோனா நோய் தொற்றை குறைக்க தொடர்ந்து பணியாற்றி வரும் முன் களப்பணியாளர்களான மருத்துவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள். அதில் அசாம், மத்திய பிரதேஷ், ஆந்திரா, தெலுங்கானா, உத்திரப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றக்கூடிய மருத்துவர்களை நோயாளிகளின் உறவினர்கள் தாக்குவது தொடர்கதையாகி வருவதை வன்மையாக கண்டித்துள்ளனர்.
எனவே, தமிழகத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு மருத்துவ துறையினருக்கு எதிரான வன்முறை மற்றும் பொருள் சேதம் ஆகியவற்றை தடுக்க ஆணை எண் 48 இன் படி மருத்துவ துறையினருக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். மருத்துவர்களை தாக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கையை 15 நாட்களுக்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, ஒரு மாத காலத்திற்குள் அவர்களை கைது செய்து பிணையில் வெளியே வரமுடியாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பொருள்சேதம் ஏற்படுத்தப்பட்டு இருந்தால் அதற்கான இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாக்குதல் சம்பவம் என்பது பல மாநிலங்களில் தொடர்ந்து நடைபெறுவதால் மத்திய அரசானது எல்லா மாநிலங்களிலும் தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட இந்த ஆணை 48ன் படி மற்ற மாநிலங்களிலும் இந்த ஆணையை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளனர். மேலும் கடந்த முதல் அலையில் சுமார் 60-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழந்தனர் இந்த இரண்டாவது அலையில் 45க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே அவர்களுக்கான இழப்பீட்டு தொகையை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அந்தந்த மாநில அரசுகளும் இழப்பீடுகளை முறையாக வழங்கிட வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் பாதுகாப்பு பகுதிகள் என்பதை உருவாக்கிட அரசு முன்வர வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஜூன் 18-ஆம் தேதி தேசிய எதிர்ப்பு தினமாக காப்புறை காப்பியம் என்ற தலைப்பின் கீழ் கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்த உள்ளதாக மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது. அதில் எந்த நோயாளிகளும் பாதிக்கப்படாத வண்ணம் கருப்புப் பட்டை அணிந்து மருத்துவமனை மற்றும் அதன் வளாகங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்படுதல், பணியாளர்களின் தியாகத்தை கூறும் விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வழியாக கூறுவது, பொதுமக்கள் மருத்துவர்கள் கலந்துரையாடலை காணொளி வாயிலாக நடத்துதல் போன்றவை மூலம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.