கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி ராணி. இவர்களுக்கு அசோக்குமார், செல்வம் என இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் வெளியூரில் தங்கி வேலை செய்து வருகின்றனர். ஆறுமுகமும் அவரது மனைவியும் தங்களுக்குச் சொந்தமான ஒரு ஓட்டு வீட்டில் வசித்து வருகின்றனர். எதிரில் இவர்களுக்குச் சொந்தமான ஒரு மாடி வீடு உள்ளது. இவர்கள் ஓட்டு வீட்டில் சமையல் செய்வதும், சாப்பிடுவதும் இரவு நேரத்தில் எதிரில் உள்ள தங்கள் மாடி வீட்டில் சென்று படுத்துக்கொள்வதுமாக இருந்துள்ளனர்.
அந்த மெத்தை வீட்டின் உள்ளே உள்ள பீரோவில், 5 பவுன் நகை, ரூ.67 ஆயிரம் பணம் வைத்திருந்தனர். வழக்கம்போல, கணவன் மனைவி இருவரும் ஓட்டு வீட்டில் சாப்பிட்டுவிட்டு மாடி வீட்டுக்குவந்து படுத்துத் தூங்கிவிட்டனர். மர்ம நபர்கள் சிலர், நேற்று முன்தினம், நள்ளிரவு இவர்களுக்குச் சொந்தமான ஓட்டு வீட்டில், புகுந்து கொள்ளை அடிக்க முயன்றுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் எதிரில் உள்ள மாடி வீட்டினுள் புகுந்து, பீரோவிலிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள 5 பவுன் நகை, ரூ.67 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஆறுமுகம் சின்னசேலம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், சின்னசேலம் இன்ஸ்பெக்டர் பொறுப்பு பாலகிருஷ்ணன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசீலன், தனிப்பிரிவு ஏட்டு பாலசுப்பிரமணி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், அவ்வூரில் உள்ள கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்துள்ளனர்.
இதே ஊரில், சமீப காலமாக தொடர்ந்து திருட்டு நடந்துவருவதாக தெரிவிக்கின்றனர் அவ்வூர் மக்கள். மேலும், இரண்டு கிராம நிர்வாக அலுவலர் வீடுகள், இரண்டு விவசாயிகள் வீடு, மாரியம்மன் கோயில் என ஐந்து இடங்களில் சமீபகாலமாக, தொடர் திருட்டு நடந்து வந்துள்ளது. இப்படி ஒரு கிராமத்தையே குறிவைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வரும் கும்பலை காவல்துறை எப்போது பிடிக்கும் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.