கீரமங்கலம் மற்றும் சேந்தன்குடி கிராமத்தில் உள்ள குளங்களை நீர்வள நிலவள திட்டத்தில் மராமத்து செய்து வேண்டும் என்று அப்பகுதி இளைஞர்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமான குளங்கள் இருந்தாலும் கடந்த பல ஆண்டுகளாக மராமத்து இல்லாமலும், ஆக்கிரமிப்புகளாலும் தண்ணீர் இன்றி வறண்டு உள்ளது. அதனால் அந்த குளங்களில் இருந்து பாசனம் செய்யப்பட்ட விளை நிலங்கள் விவசாயம் செய்யமுடியாமல் தரிசாக உள்ளது. மேலும் குளங்களில் தண்ணீர் தேங்காததால் நிலத்தடி நீர்மட்டம் கீழே சென்று கொண்டிருக்கிறது. வடகாடு, கொத்தமங்கலம், மறமடக்கி, குளமங்கலம் ஆகிய பகுதிகளில் சுமார் ஆயிரம் அடிக்கு ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் எடுக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. அதனால் சிறுகுறு விவசாயிகள் விவசாயத்திற்காக செலவு செய்து ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க முடியாமல் தவிக்கின்றனர்.
இந்த நிலையில் கீரமங்கலம் தே.மு.தி.க நகரச் செயலாளர் தனசேகரன் மாவட்ட கலெக்டருக்கு ஒரு மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கீரமங்கலத்தில் உள்ள பெரிய குளங்களான மலையாண்டார்குளம், சின்னடிக்குளம் ஆகிய குளங்களை நீர்வள நிலவள திட்டத்தில் மராமத்த செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அதே போல மரம் வளர்ப்போர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மரம் தங்க.கண்ணன் அனுப்பிய மனுவில் சேந்தன்குடி கிராமத்தில்சுமார் 100 ஏக்கர் பாசனத்தில் உள்ள சன்னாசியார் குளம், மற்றும் வாலாசமுத்திரம் ஆகிய குளங்களை நீர்வள நிலவள திட்டத்தில் இந்த ஆண்டு நிதியில் மராமத்து செய்யது தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.